எருமை மாடு வளர்ப்பில் 1 கோடி வருமானம்... அசத்தும் இளம்பெண்.. குவியும் பாராட்டுக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகர் அருகில் இருக்கும் நிகோஜ் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரத்தா தவான் என்ற 23வயது பெண் எருமை மாடுகளைக்கொண்டு பால்பண்ணை நடத்தி வருகிறார். வீட்டில் ஸ்ரத்தாவின் தந்தைக்கு உடல் ஊனம் என்பதால் வீட்டு வேலைகளை தனது 11 வயதிலேயே தனது தோழில் சுமக்க ஆரம்பித்தார். அப்போது வீட்டில் ஒரு எருமை மாடு மட்டும் இருந்தது. அந்த ஒரு மாடு படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஸ்ரத்தா படித்துக்கொண்டே தன் வீட்டில் மாடுகளையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார்.
இன்றைக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சம்பாதிக்கும் ஸ்ரத்தா தான் கடந்து வந்த பயணம் குறித்து அளித்த பேட்டியில்,"எருமை மாடுகள் எனது குடும்பத்தின் உறுப்பினர்களாக இருக்கிறது. எனது தந்தை இந்த தொழிலை என்னிடம் கொடுத்த போது மாடுகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. என் தந்தையால் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது. எனது தம்பியும் சிறியவன். எனவே நானே இரு சக்கர வாகனத்தில் சென்று பால் சப்ளை செய்யவேண்டியிருந்தது. காலையில் அனைத்து சிறுமிகளும் பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நான் காலையிலேயே மாடுகளிடமிருந்து பால் எடுப்பது மற்றும் இரு சக்கர வாகனத்தில் தெருத்தெருவாக சென்று பால் சப்ளை செய்து கொண்டிருப்பேன்.
ஆரம்பத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் சப்ளை செய்வது வெட்கமாக இருந்தது. எங்களது ஊரில் பெண்கள் யாரும் இரு சக்கர வாகனமே ஓட்டமாட்டார்கள். நான் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் விற்பனை செய்வதை பார்த்து சிலர் என்னை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். எங்களிடம் இருந்த மாடுகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்ததால் மாடுகளுக்கு தனியாக கொட்டகை கட்டினேன். 2015-ம் ஆண்டு நான் 10-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தினமும் 150 லிட்டர் பால் சப்ளை செய்தேன். 2016-ம் ஆண்டு மாடுகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைத்தது. மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சவால்களும் அதிகரித்தது. அதிக அளவில் தீவனம் தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் கிடைத்த தீவனம் போதுமானதாக இல்லை.
எனவே வெளியில் இருந்தும் வாங்க ஆரம்பித்தேன். இதனால் லாபமும் குறைந்தது. இதனால் தீவனம் எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதை தேடிப்பார்த்து வாங்க ஆரம்பித்தோம். மாடுகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தினமும் 450 லிட்டர் பால் கிடைத்தது. மாடுகளுக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டதால் ஏற்கனவே இருந்த ஷெட்டில் மேல் மாடியை கட்டி அங்கு சில மாடுகளை மாற்றினோம். எனது தம்பி கொட்டகையை சுத்தம் செய்வது உட்பட சில வேலைகளை கவனித்துக்கொள்வான். நான் தனியாகவே 20 மாடுகளிடம் பால் கரந்துவிடுவேன். வேலைக்கும் ஆட்கள் வைத்திருக்கிறேன். பால் பண்ணையை கவனித்துக்கொண்டாலும் படிப்பை கைவிடவில்லை. கிராமத்தில் இருந்துகொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். தற்போது மண்புழு உரம் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் கிலோ மண்புழு உரம் சி.எஸ் அக்ரோ ஆர்கானிஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறோம். அதோடு மாட்டுச்சாணத்தில் இருந்து பயோகேஸ் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். தற்போது பால் பக்கத்து பண்ணைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பால் மற்றும் மண்புழு உரம் விற்பனை மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது" என்று தெரிவித்தார். மாட்டுப்பண்ணையையும் பார்த்துக்கொண்டே தனது எம்.எஸ்.சி.படிப்பையும் முடித்துள்ள ஸ்ரத்தா முன்னேற நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். பால் பண்ணையில் கிடைத்த பணம் முழுவதையும் தொடர்ந்து மீண்டும் அதிலேயே முதலீடு செய்த ஸ்ரத்தா இதன் மூலம் வெளியில் கடன் வாங்குவதையும் தவிர்த்துள்ளார். மாடுகள் வாங்குவதாக இருந்தாலும், தீவனம் வாங்குவதாக இருந்தாலும் குறைந்த விலையில் கொடுக்கும் வியாபாரிகளை தேடிக்கண்டுபிடித்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!