போபால் விஷவாயு கசிவு: 40 ஆண்டுகளுக்கு பின் கழிவுகள் அகற்றம்.. பதறிய மக்கள்!
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு நச்சு வாயு கசிந்த இடம் இது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3, இடைப்பட்ட இரவில், மெத்தில் ஐசோசயனேட் வாயு கசிவு காரணமாக 5,479 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் தீவிரமான மற்றும் நீண்டகால உடல்நல பாதிப்புகளை சந்தித்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் போபாலில் உள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையை ஏன் சுத்தம் செய்யவில்லை என அதிகாரிகளிடம் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் டிசம்பர் 3ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. சம்பவம் நடந்து 40 ஆண்டுகள் ஆன நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், கழிவுகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல 4 வார கால அவகாசம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், போபாலில் உள்ள தொழிற்சாலையில் இருந்து தொழிற்சாலை கழிவுகளை தார் மாவட்டத்தில் உள்ள பிதாம்பூர் தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுமார் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். சீல் வைக்கப்பட்ட 12 கன்டெய்னர் லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு, பசுமை வழிச்சாலை வழியாக நேற்று இரவு 9 மணிக்கு போக்குவரத்து தொடங்கியது. 7 மணி நேர பயணத்திற்கு பின், இந்த கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்கள் ஆலையில் இருந்து 250 கி.மீ., தொலைவில் உள்ள பிதாம்பூர் தொழிற்பேட்டையை அடைந்தன. இதில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு 30 நிமிடம் ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு அவ்வப்போது சுகாதார பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்டமாக, சில கழிவுகள் பிதாம்பூரில் உள்ள எரியூட்டும் பிரிவில் எரிக்கப்படும். இதன் பிறகு, அதிலிருந்து கிடைக்கும் சாம்பல் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும். இதில் ஏதேனும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் உள்ளதா? என சோதிக்கப்படும்.கழிவுகளை எரிக்கும் போது உருவாகும் புகை சிறப்பு 4-வழி அடுக்கு வடிகட்டிகள் வழியாக அனுப்பப்படும். இதன் மூலம் காற்று மாசு ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நச்சு கூறுகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்த பிறகு, சாம்பல் இரட்டை அடுக்கு சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும், மேலும் எந்த வகையிலும் மண்ணுடன் அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்ளாது என்று தார் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் சிங் கூறினார்.
2015ல், 10 டன் யூனியன் கார்பைடு கழிவுகளை சோதனை அடிப்படையில் எரித்தபோது, சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மண், நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் மாசுபட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இருப்பினும், சிங் இதை மறுத்தார், 2015 இல் சோதனை அறிவிப்புகளுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அனைத்தும் சோதனை செய்யப்பட்டதாகவும் கூறினார். எனவே, கவலைப்பட ஒன்றுமில்லை. 1.75 லட்சம் மக்கள் வசிக்கும் பிதாம்பூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோர் குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!