குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜை... இஸ்ரோ தலைவர் தொடங்கி வைத்தார்!
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான பூமி பூஜையினை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு 2233 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பபட்டது. அங்கு, 986 கோடி மதிப்பில் ஏவுதளம் அமைப்பதற்கு 2024ஆம் ஆண்டு பிப். 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
அன்றைய தினமே, ரோகினி 6 ஹெச் 200 என்ற சிறிய ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல், அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்க பூமிபூஜை, அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பூமிபூஜையில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினம் ஏவுதளம் மூலம் 500 கிலோ எடை கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. தற்போது, அங்கு ரூ. 4000 கோடியில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
விண்வெளிக்குச் சென்று 18 நாள்கள் தங்கிய சுபான்சு சுக்லாவிற்கு அடுத்தபடியாக, விண்வெளிக்கு எந்திர மனிதனை அனுப்பும் திட்டம் செயலில் உள்ளது. 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும். இந்திய விண்வெளி வரலாற்றில் குலசேகரன்பட்டினம் மிக முக்கிய பங்கை வகிக்கும் எனக் குறிப்பிட்டார்.

விழாவில் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநர்கள் ராஜராஜன், பத்மகுமார், மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்பட உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
