பம்பிள் டேட்டிங் ஆப்... இளம்பெண்ணை ஏமாற்றி நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன்!
பம்பிள் டேட்டிங் ஆப்பில் பழகி, இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் திண்டுக்கல் டிஎஸ்பியின் மகன் கோவையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சம் பார்த்ததுடன், பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன.
பொள்ளாச்சி அருகே ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பெண்கள் விடுதியில் தங்கி வந்த அவர், கடந்த ஆறு மாதமாக பம்பிள் டேட்டிங் ஆப் மூலம் தனுஷ் என்ற இளைஞருடன் பழகி வந்தார்.

சமீபத்தில் தனுஷ், இளம்பெண்ணை காரில் அழைத்து சென்று, முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த நண்பருடன் இணைந்து மிரத்தியதாக கூறப்படுகிறது. இதில், தலா ஒரு பவுன் எடை கொண்ட மோதிரம், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட நகைகள் பறிக்கப்பட்டதுடன், ரூ.90 ஆயிரமும் ஆன்லைன் மூலம் கைப்பற்றப்பட்டன. பின்னர், கோவை அவிநாசி சாலையிலுள்ள ஓட்டலில் அறை வாடகை எடுத்து இளம்பெண்ணை அங்கு அனுப்பிவிட்டார்.
சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனது சகோதரியுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்ட தனுஷ் என்பது திண்டுக்கல் போலீஸ் டிஎஸ்பி தங்கப்பாண்டியன் மகன் என தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் தனுஷ் தப்பியோடினார். பின்னர் போலீஸார் தீவிரமாக தேடி அவரை கைது செய்தனர்.

விசாரணையில், தனுஷ் கோவையில் ஓட்டல் நடத்தி வந்ததாகவும், வருமானம் குறைவாக இருந்ததால் பம்பிள் உள்ளிட்ட டேட்டிங் ஆப்களில் பெண்களை குறிவைத்து ஏமாற்றி, மிரட்டி நகை, பணம் பறித்து வந்ததாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தன்னை வழக்கறிஞராக படித்து வருவதாகவும், அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், தந்தை போலீஸில் உயர் அதிகாரி எனவும் கூறி பெண்களை நம்ப வைப்பது இவரின் நயவஞ்சக முறை என போலீஸார் தெரிவித்தனர்.
சாதாரண குடும்பத்தை சேர்ந்த பல பெண்களை லாங் டிரைவ் பெயரில் அழைத்து சென்று, காரின் பின்புறத்தில் மறைவாக இருந்த நண்பரின் உதவியுடன் மிரட்டி நகை, பணம், செல்போன்கள் பறித்ததாகவும், பலர் குடும்ப அவமானத்தை எண்ணி புகார் அளிக்காமல் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் கூட்டாளியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்து, புகார்கள் வரும்படி கேட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
