சீண்டினா தாங்க மாட்டீங்க!! முதல்வர் எச்சரிக்கை!!

 
ஸ்டாலின்

அமைச்சர் செந்தில் பாலாஜி  கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததில் அமலாக்கத் துறை அவரை அதிரடியாக கைது செய்தது. இந்த  வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.   செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில்  சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனைக்கு பிறகு   அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என திமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். 


 


 


 இந்நிலையில், செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தும் அளவுக்கு நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறதா என முதல்வர்   கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  வழக்கமாக நான் 'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது இந்த வீடியோ மூலமாக இன்னொரு முக்கியமான விஷயம் பற்றிப் பேசப் போகிறேன். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் என்பதில் யாருக்கும் கொஞ்சமும் சந்தேகமில்லை!

செந்தில் பாலாஜி
பத்து ஆண்டுக்கு முன்னர் உள்ள பழைய புகாரை வைத்து, 18 மணி நேரம் அடைத்து வைத்து, மன அழுத்தம் கொடுத்து, மனரீதியாகவும் - உடல் ரீதியாகவும் பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதயநோயை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால், இதைவிட அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் இருக்க முடியுமா?
செந்தில் பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை நடத்துவதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார். நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?


அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்! இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அமலாக்கத்துறையின் நடவடிக்கை.

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத்துறை மூலமாக அவர்களது அரசியலைச் செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜகவை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜகவின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!கருத்தியல் ரீதியாக, அரசியல்ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பா.ஜ.க.வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி! இந்த ஜனநாயக விரோத பாணியைத்தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநிலங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள்.

அதிமுகவை கொத்தடிமை கூடாரமாக்க, அமலாக்கத்துறை, சிபிஐ-ஐ பயன்படுத்தியது பாஜக. அதிமுக மாதிரி அடிமைகளை, விசாரணை அமைப்புகளை காட்டி மிரட்டி பணியவைக்கிறார்கள். அதிமுகவைப் போல் உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் அல்ல திமுககாரர்கள். மிரட்டிப்பணிய வைக்க நினைத்தால் குனியமாட்டோம்; நிமிர்ந்து நிற்போம். நேருக்குநேர் சந்திப்போம். இந்தி எதிர்ப்பு போராட்டம், மிசா காலம் என நாங்கள் பார்க்காத அடக்குமுறைகள் இல்லை. மத்திய பாஜக அரசு எதேச்சதிகார நடவடிக்கைகளை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.அதிமுக ஆட்சியில் ரெய்டு நடத்தினார்களே... குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா? பாஜக-வின் காலடியில் கிடக்கும் பாதம் தாங்கி பழனிசாமி செந்தில் பாலாஜி பற்றி குறைகூறுகிறார்.நாங்க அடிச்சா தாங்கமாட்டீங்க. எங்களை சீண்டாதீங்க, தாங்கமாட்டீங்க! இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை! ” எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web