நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-5 திட்டம்... ஜப்பானில் பிரதமர் மோடி அறிவிப்பு!
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக தெரிவித்தார். விரைவில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாக இருப்பதால் தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இந்தியா- ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானுக்கு பயிற்சி பெற அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி ஆய்வில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-5 திட்டத்தில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி திட்டம் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று இரவு ஜப்பான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இன்று பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் 2வது நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கி ணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.
சென்டாய் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு உலக புகழ் பெற்ற புல்லட் ரெயில் தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. அந்த பயிற்சி மையத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கான பயிற்சியை இந்தியர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

அதன் பிறகு மற்றொரு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய உணவு விருந்து அளித்தார். அத்துடன் பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் மற்றும் அதிகாரிகளிடம் விடை பெற்ற பிரதமர் மோடி இன்று பிற்பகல் டோக்கியோவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். சீனாவில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
