அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு... முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு!
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய பாஜகவைச் சேர்ந்தவருக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசிடம் இருந்து எந்தவிதமான நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்று கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மீதும், அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம சிகாமணி மீதும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் சேற்றை வீசினர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவில், சம்பவ இடத்தில் தான் இருந்ததாகவும், தான் அதில் ஈடுபடவில்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், “மனுதாரர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் அரசியல் காழ்புணர்ச்சியுடன் சேற்றை வீசி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல் காழ்புணர்ச்சியோடு மனுதாரர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!