நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும்... வெதர்மேன் தகவல்!

 
புயல்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் பெறுகிறது. அந்தவகையில் அக்டோபர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.

இந்த காலகட்டத்தில் 44 செ.மீ. மழை பதிவாகும். இது இயல்பான மழை அளவு. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் முறையே 33.7 செ.மீ., 45.4 செ.மீ., 47.7 செ.மீ., 71.4 செ.மீ., 44.5 செ.மீ., 45.8 செ.மீ., 58.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது, 2018-ம் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் இயல்பைவிட அதிகமாகவே மழை பெய்திருக்கிறது.

நடப்பாண்டு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ள நிலையில், எந்த அளவு மழை இருக்கும் என்ற வானிலை முன்கணிப்பை தனியார் வானிலை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

புயல்

தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள வானிலை முன்கணிப்பில், ‘நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் லாநினா மற்றும் எதிர்மறை ஐ.ஓ.டி. நிகழ்வுகளை கொண்ட ஆண்டாக இருக்கும். மேலும் கடல் சார்ந்த அலைவுகள் (மேடன் ஜூலியன் அலைவு, நிலநடுக்கோட்டு ராஸ்பி அலைவு) கிழக்கு இந்திய பெருங்கடல், தென் சீனக்கடல் பகுதிகளில் நிலையான அலைவாக நீடித்து வடகிழக்கு பருவமழைக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், வெப்பமண்டல காற்று குவிதல் இந்தாண்டு தமிழகம் மற்றும் இலங்கை அட்சரேகை அருகிலேயே நீண்ட நாட்கள் நீடித்து அடுத்தடுத்து நிகழ்வுகளை தமிழகம் நோக்கி நகரச்செய்யும். இதனால் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 20 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை அதிகமாக பதிவாகும்' என தெரிவித்துள்ளார்.

மேலும், தாழ்வுப்பகுதி, மண்டலம், புயல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் மழை தரும் ஆண்டாக இந்தாண்டு அமையும் என்றும், வடகிழக்கு பருவமழை காலத்தில் குறிப்பாக நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

புயல்

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்து மழையை கொடுப்பதற்கும், குளிர்காலமான ஜனவரி, பிப்ரவரியில் இயல்புக்கு அதிக மழை பதிவாவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் சொல்லப்பட்டுள்ளது. இது தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்பு ஆகும். அதிகாரப்பூர்வமாக இதுதொடர்பான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலங்களாக குறுகிய காலத்தில் அதி கனமழை பெய்யக்கூடிய நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன. அதன்படி, நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் குறுகிய காலத்தில் அதிகனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை முன்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?