டெல்லி கார் வெடிப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்: போலீசார் முழு உஷார்
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த திடீர் கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்திய பின்னர், மாநில போலீசார் உடனடி உஷார்படுத்தப்பட்டனர்.
டெல்லியில் கார் வெடிப்பு காரணமாக அங்கு பரபரப்பு நிலவிய நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்க தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன் உத்தரவின்பேரில், முக்கிய இடங்களில் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கடுமையான சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் மெட்டல் டிடெக்டர், ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. கடலோரப் பகுதிகளிலும் 24 மணி நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு சந்தை மற்றும் புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு மிகுதியாக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல். அதில் சென்னை நகரில் மட்டும் 15,000 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ள இந்த கண்காணிப்பு நடவடிக்கை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என போலீஸ் துறை தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
