பெற்றோர்களே உஷார்... 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைகளில் செல்போன் கொடுக்காதீங்க... எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!
இன்று உலகம் முழுவதும் சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை கைகளில் ஆறாம் விரலாய் மொபைல் போன்கள் முளைத்து விட்டன. எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர், இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் , ‘க்யூரஸ்’ இதழில் வெளியிடப்பட்டது, 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 1.2 மணிநேரம் திரைகளைப் பயன்படுத்துவது, இந்த வயதினருக்கு திரைநேரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை மீறுவதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மருத்துவர் ஆஷிஷ் கோப்ரகடே “5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60-70% பேர் ஆரோக்கியமான அளவை விட அதிகமாக திரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இது மொழித் திறன், அறிவாற்றல் வளர்ச்சி, சமூகத் தொடர்புகள், உடல் பருமன், தூக்கமின்மை மற்றும் கவனக் குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.” இந்த ஆய்வு, அதிகப்படியான திரைநேரம் குழந்தைகளின் மொழி வளர்ச்சியை தாமதப்படுத்துவதாகவும், அவர்களின் புரிதல் திறனையும் சமூகத் திறன்களையும் பாதிப்பதாகவும் தெரிவிக்கிறது.
மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தவோ அல்லது உணவு உண்ண வைக்கவோ திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்,” என அறிவுறுத்தியுள்ளார். பெற்றோர்கள் தாங்களும் திரைநேரத்தைக் குறைத்து, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ” இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை விளக்கினார்: “2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திரைநேரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி பரிந்துரை செய்துள்ளது. ஆனால், எங்கள் ஆய்வில் இந்த வயதினர் 1.2 மணிநேரம் திரைகளைப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” அதிக திரைநேரம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது, குறிப்பாக மொழி புரிதல் மற்றும் உரையாடல் திறன்களை. பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களிடம் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைகள் திரைகளைப் பயன்படுத்துவதற்கு முன், பெற்றோர்கள் தங்கள் சொந்த திரைநேரத்தைக் குறைக்க வேண்டும்,” என டாக்டர் ஷெனாய் கூறினார். இந்த ஆய்வு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு திரைநேரத்தைக் குறைப்பது மற்றும் பெற்றோர் குழந்தை தொடர்பை மேம்படுத்துவது அவசியம் என வலியுறுத்துகிறது. எய்ம்ஸ் ராய்ப்பூரின் இந்த ஆய்வு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
