உயிரை பறித்த குடிபோதை.. துடி துடித்து பலியான இளைஞர்கள்.. அதிர்ச்சி பின்னணி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (24). அதே பம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஷ்ணு (24). விஷ்ணு கேரளாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை விஷயமாக சென்னையில் தங்கி உள்ளார்.

விஷ்ணுவும், கோகுலும் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இருவரும் நண்பர்கள் என்பதால் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஆகாஷ் வீட்டிற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோகுலும், விஷ்ணுவும் சென்றனர். கோகுலும் விஷ்ணுவும் ஆகாஷின் வீட்டில் இரவு முழுவதையும் கழித்தனர். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் நண்பர் வீட்டில் இருந்து புறப்பட்ட கோகுல் மற்றும் விஷ்ணு இருவரும் பள்ளிக்கரணையில் இருந்து மேடவாக்கம் நோக்கி தங்களது சொந்த வாகனமான கேடிஎம் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றனர். பள்ளிக்கரணை குளம் அருகே அதிவேகமாக சென்றதால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அருகில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்ணு தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதில் கோகுல் மின்கம்பத்தில் தலை மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஷ்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, நேற்று சனிக்கிழமை இரவு, நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளனர்.

இருவரும் மீண்டும் மதுபானம் வாங்குவதற்காக அதிவேகமாக சென்ற போது விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். போதையில் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
