தொடர்ந்து 48 மணி நேரமாக மரணத்துடன் போராட்டம்... 700 அடி ஆழ்துளை கிணற்றில் தவிக்கும் சேத்னா... தொடரும் மீட்பு பணிகள்!
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி சேத்னா 48 மணி நேரத்திற்கும் மேலாக மரணத்துடன் போராடி வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 3 வயது சிறுமி சேத்னா தவறி விழுந்த நிலையில் இரண்டு நாட்களைக் கடந்தும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் தலா 10 அடி கொண்ட 15 இரும்பு கம்பிகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து சேத்னாவை மீட்க முயன்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
மீட்பு குழுவினரின் ஆரம்ப திட்டங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அதிகாரிகள் பைலிங் இயந்திரங்களைப் பயன்படுத்தவும், எலி சுரங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழி தோண்டி சிறுமியை மீட்கவும் முடிவு செய்தனர்.
சிறுமியை மீட்பதற்காக பைலிங் இயந்திரங்களை முன்பே கேட்டு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று அந்த பகுதியில் இருந்த மக்கள் மீட்பு குழுவினரைக் குற்றம் சாட்டினர்.
இது குறித்து சேத்னாவின் தந்தை கூறுகையில், “அவள் எப்போது மீட்கப்படுவாள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. டூடு மற்றும் மானேசரில் இருந்து கொண்டு வரப்படும் பைலிங் இயந்திரங்கள், கோட்புலியை அடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்கிறார்கள்” என்று கவலை தெரிவித்தார்.
சிறுமியை மீட்க மீட்புப் பணியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கோட்புட்லி-பெஹ்ரூர் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ஓம்பிரகாஷ் தெரிவித்தார்.
ஒரு புறம் விஞ்ஞானமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மேலோங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் முறையாக பராமரிக்கப்படாத, சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்கான குழிகளில் தவறி விழுந்து உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!