மீனவர்கள் மகிழ்ச்சி... விசைப்படகுகளில் அதிகளவில் சிக்கிய மீன்கள்!
தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் மீன்கள் சிக்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதுபோல் தருவைகுளம், வேம்பார் போன்ற பகுதிகளிலும் விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து விட்டு இரவு 7.30 மணி முதல் கரைக்கு திரும்பி வரத் தொடங்கினர்.

சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் பாறைமீன், ஊளி மீன், விளைமீன், நெத்திலி மீன், நகரைமீன், செந்நகரை மீன், கணவாய் மீன், சீலா மீன், மஞ்சள் பாறை மீன், சில்வர் பாறை மீன், கிளாத்தி மீன், கோழி தீவனத்திற்கு பயன்படும் கலசல் மீன்கள் மற்றும் நண்டுகள் அதிகளவு கிடைத்து. இதனால் மீனவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்கள் அனைத்தும் அதற்கான மீன் ஏலக்கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது.
தற்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் கேரள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. எனவே அங்குள்ள வியாபாரிகள் மீன்கள் வாங்க தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து நல்ல விலை கொடுத்து மீன்களை வாங்கிச் சென்றனர். அதுபோல் தூத்துக்குடியில் 61 நாட்களுக்கு பின்பு விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க பொதுமக்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

இரவே வாங்கினால் மீன்கள் நன்றாக இருக்கும் என்பதால் மீன்பிடி துறைமுகத்திற்கு நேரடியாக வந்து தங்களுக்கு பிடித்த மீன்களை குழுக்களாக ஏலம் எடுத்து வாங்கி சென்றனர். நேற்று விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் பெருமளவு குவிந்ததால் மீன்பிடி துறைமுகம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
