பத்திரப்பதிவுத்துறை மோசடி.. 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் ஐஜி ஆலிவர் பொன்ராஜ்!

 
ஐஜி ஆலிவர் பொன்ராஜ்

கோவையில் விஐபிக்கள் வசிக்கும் இடம்தான் ரேஸ்கோர்ஸ். இந்த பகுதியில் ஒரு சென்ட் நிலம் ரூ.2 கோடி வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள 1.75 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒரு கும்பல் போலி ஆவணம் மூலம் தனியாருக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி என கூறப்படுகிறது. அரசு ஆவணங்களில் இது அரசு புறம்போக்கு என்று கூறுகிறது. ஆனால் அரசு ஆவணங்களை ஆய்வு செய்யாமல் வடகோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த உத்தரவையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாவட்ட பதிவாளர் பதவியில் உதவியாளர் நியமனம் செய்யப்பட்டு அவர் மூலம் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டிற்கு மாவட்ட பதிவாளர் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.300 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சுருட்டிய உதவியாளர் ஜெயசுதாவை சஸ்பெண்ட் செய்து ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். இதேபோல் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடு சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானது என அம்பாசமுத்திரம் பதிவு அலுவலகத்தில் தயார் செய்து அடமான பத்திரமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜூக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், அம்பாசமுத்திரம் பதிவு அலுவலகத்தில் போலி ஆவணம் மூலம் அரசுக்கு சொந்தமான கையிருப்பு அடமானப் பத்திரமாக பதிவு செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் சாந்தியை சஸ்பெண்ட் செய்து ஐஜி ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களுக்கு உதவிய பதிவுத் துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஜியின் இந்த நடவடிக்கையால் பதிவுத்துறையில் பணியாற்றும் மோசடி அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். அதே நேரத்தில், கோவையில் நடந்த முறைகேட்டிற்கு, சில மாவட்ட பதிவாளர்களும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 தமிழகத்தில் பெரும்பாலான தொழில்கள் ஓசூரில் தொடங்கப்படுகின்றன. இதனால் அங்கு ரியல் எஸ்டேட் தொழில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த பகுதியில் அனுமதியின்றி ஆவணங்கள் பதியப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகின. அதன் பிறகும் தினமும் 40   அனுமதியற்ற மனைகள் பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஓசூரில் கணக்கெடுப்பு நடத்தினால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் சோதனை நடத்த விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக ஆய்வுப் பணிகளை தொடங்கினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web