குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி... மரங்களைப் பற்றி அறிய QR போர்டு.. சுற்றுலா பயணிகள் ஆர்வம்!
நீலகிரி மாவட்டம் உதகை மண்டலம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை ஆட்சியர் அருணா தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பழக்கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய மலை பிரதேச சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. மேகங்களை உரசும் மலைகள், பனி மூட்டம் என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. தமிழகம் மட்டுன்றி, பல்வேறு மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். அதிலும் கோடை காலத்தில் இங்கு லட்ச கணக்கானோர் வருவார்கள்.
கோடை சீசனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 10ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 26ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. இதனையொட்டி பூங்கா முழுவதும், பல்வேறு வகையான பழ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக, பூங்காவின் நுழைவு வாயிலில் கண்காட்சியின் 64-வது ஆண்டை நினைவூட்டும் வகையில் ஆப்பிள், அன்னாசி, மாதுளை, வாழைப்பழம், பலாப்பழம், ஆரஞ்சு உள்பட அனைத்து வகை பழ வகைகளையும் கொண்டு நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150வது ஆண்டு ஆவதையொட்டி அதனை கொண்டாடும் விதமாக பூங்காவில் மாதுளை, டிராகன், ஆரஞ்சு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பழ கண்காட்சியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி தொடங்கியதை அடுத்து இன்று காலை முதலே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள், பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்தனர். மேலும் பூங்காவில் பல்வேறு பழங்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டிராகன், கிங்காங், முயல், வாத்து, டைனோசர், கார்ட்டூன் பொம்மைகள் போன்ற உருவங்களை பார்த்து ரசித்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். மேலும், குன்னூர் சிம்ஸ் பூங்கா மரங்களில் வைக்கப்பட்டுள்ள க்யூ.ஆர்.போர்டை ஸ்கேன் செய்து மரங்களின் விவரம் அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய பழ கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
