இன்று இறுதிசடங்குகள்... காலை 8 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் மன்மோகன் சிங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
டிசம்பர் 26 இந்தியர்களுக்கு சோகமாக தினமாக விதிக்கப்பட்டிருக்கிறது போல. சுனாமி நினைவு தினத்தின் இரவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் முதுமை மற்றும் இதய நோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகள் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜனவரி 1ம் தேதி வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏற்கெனவே திட்டமிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மற்ற அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்களிலும் இந்திய தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்கும், அவர் வகித்த பதவியின் கண்ணியத்திற்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிச் சடங்கின் போது சிறப்பு அரசு நெறிமுறை பின்பற்றப்படும். உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன், அவர் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியால் போர்த்தப்படுவார். மேலும், இறுதிச் சடங்கின் போது அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி நடத்தப்படும். இது மிக உயர்ந்த அரச கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
முன்னாள் பிரதமரின் இறுதி ஊர்வலத்தின் போது கடுமையான பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் பின்பற்றப்படும். அவரது இறுதி பயணத்தில் பொதுமக்கள் முதல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பங்கேற்பார்கள். இது தவிர, இராணுவ இசைக்குழுக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களும் இறுதி ஊர்வலம் மற்றும் அணிவகுப்புகளில் பங்கேற்பார்கள்.
முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் உடல்கள் டெல்லி ராஜ்காட் வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் மன்மோகன் சிங்கின் உடலையும் இங்கு தகனம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் பல முன்னாள் பிரதமர்களுக்கு தனி சமாதி கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இறுதிச் சடங்குகள் செய்யும் முறை இறந்தவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இருக்கும்.
வழக்கமாக முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்குகள் டெல்லியில் நடைபெறும். ஆனால் பல சந்தர்ப்பங்களில், அவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் சொந்த மாநிலத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மன்மோகன் சிங்கின் உடல் இன்று டிசம்பர் 28ம் தேதி காலை 8 மணிக்கு மோதிலால் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் தலைமையகத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங்கின் மூன்று மகள்களில் ஒருவர் அமெரிக்காவில் உள்ளார். நேற்றிரவு அவர் டெல்லி வந்த நிலையில் இன்று மன்மோகன் சிங்கின் இறுதிசடங்குகள் நடைபெறுகின்றன
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!