போதையில் அரசு பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு அடி, உதை... பயணிகள் ஆவேசம்!
தூத்துக்குடி அருகே மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் உடனடியாக விதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனிக்கு நேற்றிரவு அரசு டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை தூத்துக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46) என்பவர் ஓட்டி சென்றார். இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சிறிது தூரம் சென்ற போது பேருந்தை ஓட்டுநர் தாறுமாறாக இயக்கினார். இதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து கண்டக்டரிடம் இது குறித்து முறையிட்டனர்.
எனினும் அந்த பேருந்து தாறுமாறாகவே சென்று ஓட்டப்பிடாரம் பேருந்து நிலையத்தை அடைந்தது. இது குறித்து பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநரிடம் கேட்க சென்றனர். அப்போது ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பயணிகள், அப்பகுதி மக்கள் ஓட்டுநர் பாலசுப்பிரமணியனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து உடனடியாக ஓட்டப்பிடாரம் போலீசுக்கும், தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் கண்ணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பேருந்து ஓட்டுநரை போலீசார் சோதனை செய்ததில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் மது அருந்தியதாக தெரிவித்தார்.
இதையடுத்து மது போதையில் பேருந்தை இயக்கிய குற்றத்திற்காக உடனடியாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி கண்ணன் தெரிவித்தார். பின்னர் மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. ஓட்டப்பிடாரத்தில் மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு பயணிகள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!