மும்பையில் தொடரும் கனமழை... வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலி!
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், பெருவெள்ளத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக மழை கொட்டியது. அதிகாலை முதல் பகல் 1 மணி வரை நகரின் பல்வேறு இடங்களில் மழை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. அதன் பிறகும் மழை நீடித்தது. நகரில் 8 மணி நேரத்தில் மட்டும் 17.7 செ.மீ. மழையளவு பதிவானது.

பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. சாலைகள் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்ததால் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. பல இடங்களில் பஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. மும்பை கிழக்கு, மேற்கு விரைவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மாட்டுங்கா கிங்சர்க்கிள் பகுதியில் தேங்கிய வெள்ளத்தில் அரசு உதவிபெறும் பள்ளி பஸ் சிக்கியது. பஸ்சில் 6 மழலையர் பள்ளி மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் மாணவர்களை பத்திரமாக மீட்டனர். பல இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மும்பையில் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ரெயில்கள் 15-30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
மழையால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இன்றும் மிகவும் கனமழைக்கான ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் இன்றும்(செவ்வாய்க்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல நேற்று மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நாந்தெட், லாத்தூர், சாங்கிலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. நாந்தெட் மாவட்டத்தில் லெண்டி அணை உள்ள முகேட் தாலுகா பகுதி தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

நாந்தெட் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவரது எக்ஸ் பக்கத்தில், "இந்த மாவட்டத்தில் 20.6 செ.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. ராவன்காவ் பகுதியில் 225 பேர் வெள்ளத்தில் சிக்கினர். மிகவும் ஆபத்தான பகுதியில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் வெவ்வேறு இடங்களில் பலர் வெள்ளத்தில் சிக்கினர். இதில் 7 பேர் பலியாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
