வீட்டில் கஞ்சா விற்பனை செய்த கணவன்... போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த மனைவி!
சென்னை திருவொற்றியூரில், வீட்டிலேயே வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த கணவனை, போலீசாரிடம் மனைவி புகாரளித்து பிடித்துக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூர் ரேடியன்ஸ் குடியிருப்பைச் சேர்ந்த ராஜா (28) தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் போதைக்கு அடிமையான ராஜா, நண்பர்கள் மூலம் கஞ்சா பழக்கத்திற்கும் அடிமையாகி இருக்கிறார். இதனால் தம்பதியருக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது.

இந்நிலையில் அவர்களது அறையில் கஞ்சா பொட்டலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜாவின் மனைவி, அது குறித்து விசாரித்த போது, ‘அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக’ ராஜா கூறியுள்ளார். இதையடுத்து மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியை கண்மூடித்தனமாக அடித்து, வீட்டை விட்டு ராஜா வெளியேறியுள்ளார்.
பின்னர் ராஜாவின் மனைவி, காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது வீட்டில் இருக்கும் கஞ்சாவை பற்றியும், தன் கணவனை பற்றியும் தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த கஞ்சாவை கைப்பற்றி ராஜாவையும் கைது செய்தனர்.

ராஜாவிடம் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் ஹரிஹரன்(25 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். ராஜா, ஹரிஹரனிடமிருந்து கஞ்சாவை பெற்றுள்ளார். அதே போல் ஹரிஹரனும் தான் வேறு சிலரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
