பதவி நீக்க மசோதா... அவசர நிலையை விட அபாயகரமானதாக உள்ளது... முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகஸ்ட் 20ம் தேதி மக்களவையில் 130வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 2025, மற்றும் மத்திய அரசு பிரதேசங்கள் மசோதா, 2025 ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, 2025 ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாக்கள், ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் 30 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பிரதமர், முதல்வர் அல்லது அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கு சட்டரீதியான கட்டமைப்பை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், இந்த 130வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை “கருப்பு மசோதா” என்று விமர்சித்து, இது இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி, அரசியலமைப்பின் ஜனநாயக அடித்தளத்தை சீர்குலைக்கும் முயற்சியாக பாஜக அரசு மேற்கொண்டு இருப்பதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “இந்த மசோதா, எந்தவொரு விசாரணையோ, தீர்ப்போ இல்லாமல், 30 நாள் காவலில் இருப்பதை மட்டுமே காரணமாக வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதற்கு வழிவகுக்கும் என குற்றம் சாட்டியுள்ளார். இது ஜனநாயகத்தின் அடிப்படையை அச்சுறுத்துவதாகவும், பாஜகவின் “வாக்கு திருட்டு” மோசடியிலிருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
” இது நீதித்துறையின் அதிகாரத்தை பறித்து, நியாயமான விசாரணை இல்லாமல் தண்டனை வழங்குவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது எனக் கூறியுள்ளார். இந்த மசோதா பாஜக இல்லாத மாநில அரசுகளை அச்சுறுத்துவதற்கும், கூட்டணியில் உள்ள பிராந்திய கட்சிகளின் தலைவர்களை “எங்களுடன் இரு, இல்லையேல்…” என மிரட்டுவதற்கும் உருவாக்கப்பட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து “சூப்பர் அவசரநிலையை” விட பெரிய அபாயமாக உள்ளதாகவும், இது ஒரு கட்சி, ஒரு அரசு, ஒரு தலைவர் என்ற முறையை நோக்கி நாட்டை தள்ளுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும்படி அழைப்பு விடுத்து, இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
