இத்தாலி பண்ணைகளில் அடிமைகளாக பணிபுரிந்த இந்தியர்கள்.. 33 தொழிலாளர்கள் விடுவிப்பு!
இத்தாலியின் வெரோனா மாகாணத்தில் விவசாய நிலங்களில் முதலாளிகளால் அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 33 இந்திய விவசாயத் தொழிலாளர்களை இத்தாலி அதிகாரிகள் விடுவித்துள்ளனர். இவர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் அப்பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் என்பவர் வேலை செய்யும் போது இயந்திரத்தில் கை சிக்கியது. உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் விட்டுச் சென்றுள்ளனர் முதலாளிகள். இதையடுத்து அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவது தெரிய வந்தது. அவர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம், வாரத்தில் 7 நாட்கள் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.360 கொடுக்கப்பட்டுள்ளது. 2 இந்திய ஏஜென்டுகள் தொழிலாளர்களை அழைத்துச் சென்று, ரூ.15 லட்சத்தைக் கட்டினால் இத்தாலியில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று கூறி அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்த ரூ.15 லட்சத்தை முழுமையாக பிடித்தம் செய்யும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. மேலும் ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர அனுமதி பெற்று தருவதாக கூறி ஏஜென்ட்களும் ஏமாற்றினர். இப்போது அடிமைகளாக ஏமாற்றப்பட்ட 33 இந்தியர்களை மீட்டுள்ள இத்தாலிய அதிகாரிகள், அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
