கவரப்பேட்டை ரயில் விபத்து... 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு!
நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நேற்று இரவு, தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படாத நிலையில், ரயிலின் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது.

இந்நிலையில், இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க, 5 உயரதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஆய்வு செய்து, ரயில்வே துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் நேற்று காலை 10.30 மணியளவில் பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், நேற்றிரவு 8.27 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஏற்கெனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அந்த ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், ரயிலின் பார்சல் பெட்டியின் அடிப்பகுதியில் தீ பற்றி எரிந்தது.
இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ஆர்.பி,எஃப். போலீசார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படாத போதும், 19 பேர் படுகாயமடைந்தனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதவிர, 3 பயணிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் கவரைப்பேட்டை அருகே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பயணிகளை பேருந்துகள் மூலமாக, பொன்னேரி நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து இரண்டு மின்சார ரயில்கள் மூலமாக சென்ட்ரலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை அந்த பயணிகள் அனைவரும் சிறப்பு ரயிலில் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயரதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
ரயில் விபத்துக்கு சிக்னல் தொழில் நுட்ப பிரச்னையா அல்லது மனித தவறா, வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிந்து,விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
