தமிழகத்தையே உலுக்கிய ஆணவக் கொலை... இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

 
ஆணவக் கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாதி மறுப்பு காதல் திருமணத்தைத் தந்தை ஏற்க மறுத்ததால் மகன், பாட்டி என இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது  தமிழகத்தையே உலுக்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபணமான தந்தை தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்து தீர்ப்பை வரவேற்று கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை தாலுக்கா அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50), தனது மகன் சுபாஷ் (28) மாற்றுச் சமூகத்தை சேர்ந்த அனுசுயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எம்பிஏ படித்து முடித்திருந்த சுபாஷ், திருப்பூரில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அனுசுயாவும், சுபாஷின் பாட்டி கண்ணம்மாளும் இந்த திருமணத்திற்கு ஆதரவாக இருந்தனர்.

ஆணவக் கொலை

2023 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று புதுமண தம்பதியர் அருணபதிக்கு வர, குடும்பத்தில் சமரசம் செய்வதற்காக கண்ணம்மாள் முயன்றார். ஆனால் தண்டபாணி சமரசத்தை ஏற்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை, தூங்கிக் கொண்டிருந்த சுபாஷை தாக்க முயன்ற தண்டபாணியை தடுத்த கண்ணம்மாளையும் அவர் வெட்டிக் கொன்றார். பின்னர் மகன் சுபாஷையும் படுகொலை செய்தார். உயிருடன் தப்பியோட முயன்ற அனுசுயாவும் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆணவக் கொலை

இந்த இரட்டை சம்பவத்தில் ஊத்தங்கரை போலீசார் பதிவு செய்த வழக்கு, கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சாட்சிகள், ஆதாரங்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்த நீதிபதி லதா, தண்டபாணி குற்றவாளி என்பதை உறுதி செய்து, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.8,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை வரவேற்று, கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!