லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

 
அஜித்

சிவகங்கை  மாவட்டத்தில், லாக்-அப் மரணம் நிகழ்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா? என்று ஜகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மடப்புரம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித் லாக்கப் சிவகங்கை எஸ்.பி.

முன்னதாக மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் 5 போலீசார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசார் என்பதால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, திருப்புவனம் இளைஞர் லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் நடைபெற்ற நிலையில், இந்நிலையில் திருப்புவனம் அருகே மடப்புரம் கோவிலில் வேலைபார்த்த அஜித்குமார் என்பவர் காவல் மரணத்தில் உயிரிழந்த நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் சிவகங்கை எஸ்.பியை இடமாற்றம் செய்துள்ளீர்களே? அவரை இடைநீக்கம் செய்திருக்க வேண்டாமா? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்று அஜித்குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அவரது உடல் மதுரை கொண்டு செல்லப்பட்டது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28ம் இரவு 12 மணி வரை தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., அஜித்தின் அம்மாவிடம், உங்கள் மகன் இறந்து விட்டார் என கூறியுள்ளார் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அஜித்

பின்னர், நகை காணாமல் போனது தொடர்பாக எப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினர். ஜூன் 28-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்றிரவே அது ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. புகார் கொடுத்தவுடன் சி.எஸ்.ஆர். (CSR) பதிவு செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது முழுக்க முழுக்க சட்ட விரோதமாக நடந்த காவல் மரணமாகும். தலைமை காவலர் கண்ணன், மானாமதுரை டி.எஸ்.பி. (DSP) யின் சிறப்புப் படையைச் சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதி மீறலாகவே பார்க்கப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல கதை கூறுகின்றனர். அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரம் பேசப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய திருப்புவனம் நீதித்துறை நடுவரை காவல்துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்காதது ஏன்?" என சரமாரியாக கேள்விகளை எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அஜித்குமார் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதை மறைக்கவே இது போன்ற நடவடிக்கைகளை எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.

பின்னர், அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தால் உண்மையை சொல்ல வைத்து விடுவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்டாலும் இப்படித் தான் நடந்து கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த கேள்விகளுக்கு டி.ஜி.பி. (DGP) பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?