சாலைத் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து... 21 பேர் காயம்!

கோயம்புத்தூர் அருகே, தனியாருக்கு சொந்தமான ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று சாலைத்தடுப்பு சுவரில் மோதியதில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் காயம் அடைந்த 21 பேர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டனர்.
திருச்சியில் இருந்து கோவைக்கு தனியாருக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்தை பசுபதி என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக அபிஷேக் இருந்தார். பேருந்து, திருப்பூரில் சில பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பிறகு அங்கிருந்து கோவை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டு இருந்தது. பேருந்தில் 26 பயணிகள் இருந்தனர்.
அதிகாலை 2.30 மணியளவில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அந்த பேருந்து கருமத்தம்பட்டி மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, மேம்பாலத்தையும், அணுகுசாலையையும் பிரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதியது.
இதனால் அயர்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் முன்பக்க இருக்கைகளின் மீது மோதியும், பேருந்துக்குள் கீழே விழுந்தும் பலத்த காயம் அடைந்தனர். இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் அலறித் துடித்தனர்.
இதற்கிடையே ஆம்னி பேருந்தின் பேட்டரியில் இருந்து புகைமூட்டம் வந்தது. உடனே பேருந்து டிரைவர் பயணிகளை சீக்கிரமாக பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். அதை கேட்ட பயணிகள் தூக்க கலக்கத்தில் பேருந்தில் இருந்து இறங்க முயன்றனர். இதில் சிலரால் பேருந்திலிருந்து இருந்து வேகமாக இறங்க முடியவில்லை.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சூலூர் நோக்கி லாரியை ஓட்டி வந்த சபரிமலை, மாற்று டிரைவர் ரமேஷ் ஆகியோர் பேருந்தில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பேட்டரியில் இருந்து எழுந்த புகை திடீரென்று, தீப்பிழம்பாக மாறி பேருந்து முழுவதும் பரவியது. பின்னர் தீ வேகமாக பேருந்து முழுவதும் குபுகுபு என்று பற்றி எரிந்தது.
இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அந்த பஸ் முற்றிலும் எரிந்து கருகி எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இந்த விபத்தில் 21 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!