மதுரையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கூல் லிப்,புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!
மதுரையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கூல் லிப், குட்கா, புகையிலை பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட நிலையில் மதுரை புதூர் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.
மதுரை மாநகர துணை ஆணையர் கருண் கராட் மேற்பார்வையில் உதவி ஆணையர் சிவசக்தி, புதூர் காவல் ஆய்வாளர் மாடசாமி அடங்கிய குழுவினர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். கண்டெய்னர் லாரிக்குள் இருக்கும் பொருட்கள் குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து லாரியை போலீசார் சோதனையிட்டபோது சிறுவர்களுக்கான அழகு சாதன பொருட்கள், சோப்புகள், கோழித் தீவனம் , கால்நடை மருந்துகள் பார்சல்களுக்கு இடையே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கூல் லிப், குட்கா , புகையிலை பொருட்களை மறைத்து வைத்து கடத்தி செல்வது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். கண்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து வந்த கார் மற்றும் 2 வேன்களும் சிக்கின.
இதனைத் தொடர்ந்து மதுரை புதூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கண்டெய்னர் லாரியை முழுவதுமாக ஆய்வு செய்த போது தலா 1500 பாக்கெட்டுகளைக் கொண்ட 85 மூட்டைகளில் குட்கா, தலா 500 பாக்கெட் கொண்ட 7 மூட்டை கூல் லிப், தலா 500 பாக்கெட் அடங்கிய 7 மூட்டை புகையிலை என ஒன்றரை டன் எடையிலான புகையிலைப் பொருட்களை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர் பெங்களூர் சிகானிபகுதியச் சேர்ந்த கோபிநாயக் மகன் சதீஸ்நாயக் (25), தருமபுரி மாவட்டம், தோப்பூர் வெங்கடாசலம் மகன் பழனிச்சாமி (27), கார் ஓட்டுநர் சேலம் மேச்சேரி பச்சையப்பன் மகன் கிருஷ்ணமூர்த்தி ( 38),மேச்சேரி தனராஜ் மகன் சக்திவேல் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டெய்னர் லாரியில் இருந்து குட்கா, புகையிலை பொருட்களை பிரித்து மதுரை நகர், தென்மாவட்ட பகுதிக்கு கொண்டு செல்வதற்கு வந்த 2 வேன்களும், மதுரையில் வைத்து குட்கா, புகையிலையை வியாபாரிகளுக்கு பிரித்து கொடுக்க 2 பேர் வந்த காரும் பறிமுதல் செய்தனர். காரில் வந்த ஒருவர் தப்பி ஓடிய நிலையில் அவரைப் போலீசார் தேடி வருகிறனர். பறிமுதல் செய்த கூலிப், குட்கா, புகையிலை பாக்கெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!