மனைவி, மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்.. நெல்லையில் பயங்கரம்!
பெற்றோருக்கு இடையே சண்டை நடந்துள்ள நிலையில், சண்டையை விலக்கி விட்ட மகன், தனது தாய்க்கு ஆதரவாக பேசி, தந்தையுடன் சண்டையிட்டதால் ஆத்திரத்தில், மனைவியையும், மகனையும் அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், 70 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகரியா(60). இவரது மனைவி மெர்சி(57). வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு, மீண்டும் திரும்பி வந்து முன்னீர்பள்ளம் பகுதியில் வசித்து வரும் சகரியா, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் 2 ஆண் பிள்ளைகள் இருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் - மனைவிக்கிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூத்த மகன் ஹென்றிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்கு தந்தை சகரியாவை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திருமணம் முடித்த பிறகு, புதுமண தம்பதி நேற்று கன்னியாகுமரிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த சகரியா தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இளைய மகன் ஹார்லி வினோ வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், இருவரையும் விலக்க முயற்சித்துள்ளார். ஒருகட்டத்தில், தாய்க்கு ஆதரவாக தந்தையிடம் பேசியதில் ஆத்திரமடைந்த சகரியா, தனது மனைவியையும், மகனையும் அறையில் தள்ளி, வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பெட்ரோலை அறைக்குள் ஊற்றி தீ வைத்துவிட்டு, மீதமிருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீடு மளமளவென தீப்பிடித்து எரிவதைக் கண்ட அக்கம்ப்பக்கத்தினர் இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து மூவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த போது தாய் மெர்சி மற்றும் மகன் ஹார்வி பினோ இருவரும் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து 70% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சகரியாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மகனின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தை சகரியா இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக தடய அறிவியல் துறையின் உதவி இயக்குனர் ஆனந்தி ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றார். சிறிய குடும்பத்தகராறில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
