தாயின் புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணம்.. ஆன்லைன் ரம்மியில் இழந்த மகன் தற்கொலை!
தாயின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரம்மி உள்ளிட்ட சூதாட்ட ஆப்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சின்னமலையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸார் அளித்த தகவலில், ""சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை, ஆரோக்கிய மாதா இரண்டாவது தெருவில் வசிப்பவர் ஆகாஷ் (26), கேட்டரிங் படிப்பை முடித்துவிட்டு, அவ்வப்போது கேட்டரிங் தொடர்பான வேலைகளில் வேலை செய்து வருகிறார்.
இவரது தந்தை எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்த ஆகாஷ், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக்கியுள்ளார். சிறு தொகைக்கு விளையாடி வந்த அவர், காலப்போக்கில் ரம்மி விளையாட்டிற்கு முற்றிலும் அடிமையாகி விட்டார். இழந்த பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த சூழலில், நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்தார். சிகிச்சைக்காக வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாயை நேற்று காணாமல் போனதாக அவரது தாயும், சகோதரரும் கடுமையாக திட்டியுள்ளனர்.
இந்நிலையில், அவரது தாய் திட்டியதையடுத்து, ஆகாஷை காணாததால், அவரது தாயும், அண்ணனும் தேடி வந்தனர். ஆகாஷின் சகோதரர் மொட்டை மாடிக்குச் சென்று சோதனை செய்தபோது, அங்குள்ள அறையில் ஆகாஷ் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இறந்து கிடந்தார். உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!