விடுதிக்குள் புகுந்து தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு... தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடியில் தனியார் விடுதி உரிமையாளர் மற்றும் அவரது தாயை அரிவாளால் வெட்டிய பெண் ஊழியரின் மகன் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர் எட்டயபுரம் ரோட்டில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இங்கு துப்புரவு பணியாளராக லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த பார்வதி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் பார்வதியின் மகன் செல்வம், தனது நண்பர் ஒருவருடன் விடுதிக்கு வந்தார். அங்கு முருகானந்தமும், அவரது தாயார் பார்வதியும் இருந்தனர்.

அப்போது செல்வத்துக்கும், முருகானந்தத்துக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது நண்பருடன் சேர்ந்து முருகானந்தம், பார்வதி ஆகியோரை அரிவாளால் சரமாரி வெட்டினார். இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

அதற்குள் செல்வனும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த முருகானந்தம், பார்வதியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குபதிவு செய்த வடபாகம் போலீசார், எதற்காக தாய்-மகனை அரிவாளால் வெட்டினர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். விடுதிக்குள் புகுந்து தாய்-மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
