கவின் கொலை வழக்கில் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது... கனிமொழி எம்.பி.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட, கவின் கொலை வழக்கில் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் - தமிழ்செல்வி தம்பதியின் மகன் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் (27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் தனது சகோதரி சுபாஷினியுடனான காதலை கைவிட வலியுறுத்தியும் கவின் கேட்காததால் அவரை சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் (24) கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கொலைக்கு தூண்டுதலாக சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதி செயல்பட்டதாகவும், அவர்களை கைது செய்யும் வரை கவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து சுர்ஜித்தின் பெற்றோர் பெயர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு, இரு நாள்களுக்கு முன் சரவணன் கைது செய்யப்பட்டார். இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். நான்கு நாள் போராட்டத்திற்கு பின்னர் கவின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கவினின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கவினின் உடல், ஆறுமுகமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகையா, ஊர்வசி எஸ். அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கவினின் உடல், இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கனிமொழி எம்.பி. கூறியது: இந்த வழக்கை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். கொலை செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
