கதறும் மக்கள்... தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் இருமடங்கு எகிறிய டிக்கெட் விலை!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை தினங்களாக அமைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டனர். இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்ந்து அதிர்ச்சியளித்தது. ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளானார்கள்.
சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. பெரும்பாலான ஊர்களில் ஆடி திருவிழா நடைபெறுவதால் பலரும் இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்குச் செல்ல ஆயத்தமானார்கள். இதை பயன்படுத்தி நேற்று மாலை முதலே சென்னையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்கு வரை அதிகரித்து உள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சாதாரண நாட்களில் ரூ.650 முதல் ரூ.1500 வரை கட்டணம் இருக்கும் ஆம்னி பேருந்துகளில், தொடர் விடுமுறை நாட்களில் ரூ.1,500-க்கு குறைந்து டிக்கெட் கட்டணம் இல்லை. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.1,300 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், நெல்லையில் இருந்து சென்னைக்கு வர ரூ.1,500 முதல் 2,000 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பேருந்துகளில் இருமடங்கை தாண்டியே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்துகளிலும் இருமடங்கு டிக்கெட் விலைக் கொடுத்தும் மக்கள் முண்டியடித்து ஏறுகின்றனர். ஒரு சில இருக்கைகளே காலியாக இருக்கின்றன. எவ்வளவு கட்டணம் என்றாலும், எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஆம்னி பேருந்துகளில் பயணிக்கத்தான் செய்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இதுபோன்ற தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் கட்டணம் உயர்வு குறித்து பேசுவதும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொல்வதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
