அதிர்ச்சி... ஹோட்டல் மீல்ஸ்ல பூரான் ப்ரை.. விஷத்தைப் பரிமாறும் உணவகங்கள்!
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உணவகங்களில் தொடர்ந்து எலி தலை, கரப்பான்பூச்சி, பல்லி என்று அலட்சியமாக பரிமாறி, சுகாதாரமில்லாத உணவுகளால் வாடிக்கையாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியதும் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள். பின், மீண்டும் இந்த உணவகங்கள் செயல்படத் துவங்கி பொதுமக்களின் உயிரைக் காவு வாங்கும்.

இப்படி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளாவிலும் இந்த போக்கு அதிகரித்து வருகிறது. கேரளத்தில் ஷவர்மா பல பேர் உயிரை பலிவாங்கியது நினைவிருக்கும். ஒரு பக்கம் கெட்டுப் போன இறைச்சியைப் பயன்படுத்தி பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கிறார்கள் என்றால், இன்னொரு புறம் சுகாதாரமில்லாமல் பல்லி, எலி, தவளை, பூரான், பாம்பு என்று எல்லா பட்சிகளும் பாரபட்சம் இல்லாமல் உணவில் பரிமாறப்படுகிற அவலம் தொடர்கிறது.
இந்நிலையில், திருப்பதியில் பிரபல ஓட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட மதிய உணவில் மோர் மிளகாயுடன் பூரானையும் சேர்த்து பரிமாறி இருக்கிறார்கள்.
பரிமாறப்பட்ட தட்டில் பூரான் ப்ரை ஆன நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் இது குறித்து உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர், ஓட்டலில் ஆய்வு செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
திருப்பதி லீலா மகால் பகுதியில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டல் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு திருப்பதிக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் சித்தூர் மாவட்டம் புத்தூரை சேர்ந்த ராஜசேகரன் தம்பதியினர் திருப்பதிக்கு சென்றிருந்த நிலையில், இந்த ஓட்டலில் மதிய உணவு ஆர்டர் செய்து காத்திருந்தனர். அவர்களுக்கு சாதம், சப்பாத்தி, சாம்பார், மோர் குழம்பு, ரசம், தயிர், அப்பளம் மற்றும் மோர் மிளகாய் ஆகியவை பரிமாறப்பட்டது.

அதில் மோர் மிளகாயுடன் இறந்த நிலையில் பூரான் ப்ரை கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் குடும்பத்தினர், ஓட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அலட்சியமாக பேசியதால் இது குறித்து திருப்பதி மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உணவு சமைக்கும் கூடம், உணவு பொருட்களை இருப்பு வைக்கும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வில், சுத்தமான முறையில் உணவு கூடங்கள் பாரமரிக்கப்படாதது தெரிந்தது. உடனடியாக ஓட்டல் நிர்வாகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்து, விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.
மோர் மிளகாயுடன் பூரான் பரிமாறப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
