101 வயதிலும் உற்சாகம் குறையாத ராமத்தாள்... 7 தலைமுறையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!
இன்றைய வேகமான வாழ்க்கை, உடல் நல சவால்களால் நிறைந்த காலத்திலும் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்கிறவர்கள் மிக அரிது. ஆனால், இயற்கை முறை வாழ்க்கை மற்றும் ஒழுக்கமான பழக்கவழக்கங்களால் நீண்ட ஆயுளுடன் வாழும் தலைமுறையின் சிறந்த உதாரணமாக திகழ்கிறார் திருப்பூர் ஜீவா காலனியைச் சேர்ந்த ராமத்தாள்.

நூறு வயதை கடந்த ராமத்தாள் இன்று தனது 101வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு, திருப்பூர்–கோவை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் பாட்டியின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
கேக் வெட்டி, ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.7 தலைமுறைகள் — மகன், மகள், பேரன், பேத்தி, எள்ளு பேரன், எள்ளு பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப் பேத்தி என — அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடிய இந்த விழா, குடும்ப பாசத்தின் அரிய காட்சியாக அமைந்தது.

பாட்டியின் பேத்தி சுவாதி தெரிவித்ததாவது: “ஏழு தலைமுறைகள் ஒன்றாக சேர்ந்தது எங்களுக்கு பெரும் பெருமை. பாட்டி ஒருநாள் கூட பேப்பர் படிக்காமல் இருப்பதில்லை. நேர மேலாண்மையில் மிகத் துல்லியமானவர். இன்னும் சில வருடங்களுக்கு முன் வரை அவர்களின் முடி கூட கருப்பாகத்தான் இருந்தது. டயட், ஒழுக்கம், எளிமை — அவங்க வாழ்க்கை முழுக்க அதுதான். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு,” என்றார்.
அதே சமயம், ராமத்தாள் பாட்டி உணர்ச்சி மல்க, “எல்லோரும் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்,” என்று கூறி ஆசீர்வதித்தார். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, எளிய உணவுமுறை, மன அமைதி, ஒழுக்கம் — இதுவே நீண்ட ஆயுளின் ரகசியம் என்பதை ராமத்தாளின் வாழ்வே வெளிப்படுத்துகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
