பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. ராணுவம் களமிறங்கியது!

 
நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்

அண்டை நாடான நேபாளத்தில், சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும் வகையில், ‘ஜென் சி’ என்ற குழுவை தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மந்திரிகள் மற்றும் அதிகாரம் மிக்கவர்களின் வாரிசுகள் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர் என்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் எப்படி வந்தது? ஊழல் மூலம் வந்ததா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதனால், நேபாள அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. நேபாளத்தில் இயங்கி வரும் சமூக வலைத்தளங்கள் தங்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கெடு’ விதித்தது. அந்த கெடுவுக்குள் பதிவு செய்யாத பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்பட 26 சமூக வலைத்தளங்கள் மீது நேபாள அரசு தடை விதித்தது.

இதனால், நேபாள மாணவர்களும், இளைஞர்களும் ஆத்திரம் அடைந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் தலைநகர் காட்மாண்டுவில் ‘ஜென் சி’ அமைப்பின்கீழ் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்

போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அதில், 19 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் 12 வயது மாணவர் ஆவார். மோதல் மற்றும் கல்வீச்சில், போலீசார், போராட்டக்காரர்கள் உள்பட 300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பொறுப்பேற்று நேபாள உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ராஜினாமா செய்தார். காட்மாண்டு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமயத்தில், இளைஞர்களின் கோபத்தை தணிப்பதற்காக சமூக வலைத்தளங்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று போராட்டக்காரர்கள் 2-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். சமூக வலைத்தள தடை நீக்கப்பட்டபோதிலும், ஊழல், 19 பேர் மரணம் ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். ‘‘உள்துறை மந்திரி ராஜினாமா செய்தால் போதாது, பிரதமர் கே.பி.சர்மா ஒலி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’’ என்ற புதிய கோரிக்கையை முன்வைத்தனர்.

அனைத்துக்கட்சிகளும் அடங்கிய தேசிய அரசு அமைக்க வேண்டும், ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உத்தரவாதமான கருத்து சுதந்திரம் வேண்டும், அரசியல் பதவி வகிப்போருக்கு ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் முன்வைத்தனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு, போலீசார் குவிப்பு ஆகியவற்றையும் மீறி, போராட்டக்காரர்கள் நேற்று பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். தலைநகரின் பல பகுதிகளில், ‘‘கே.பி. திருடன், நாட்டை விட்டு வெளியேறு’’ என்று கோஷமிட்டபடி சென்றனர். பக்தபூரில் உள்ள பால்கோட்டில் பிரதமர் சர்மா ஒலியின் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். சர்மா ஒலி, பல்வடாரில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்தார்.

நேபாளத்தில் நீடிக்கும் கலவரம்.. பிரதமர் வீட்டுக்கு தீவைப்பு.. களமிறங்கிய ராணுவம்

பிரதமர் அலுவலகத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர் பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலின் சொந்த வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகிய ரமேஷ் லேகாக்கின் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மீது தடையை அறிவித்த தகவல் தொடர்பு மந்திரி பிரித்வி சுப்பா குருங்கின் லலித்பூர் மாவட்ட இல்லம் மீது கற்களை வீசினர். லலித்பூரில் உள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். காட்மாண்டுவில், மற்றொரு முன்னாள் பிரதமர் ஷெர் பகதுர் துபாவின் இல்லத்தையும் சூறையாடினர்.

காட்மாண்டுவில், கலங்கி, காலிமதி, டோஹாசால், பனேஷ்வர் ஆகிய இடங்களிலும், லலித்பூர் மாவட்டத்தில் சியாசல், சாபாகாவ், டெக்கோ ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ‘‘மாணவர்களை கொல்லாதே’’ என்று முழக்கமிட்டபடி அவர்கள் சென்றனர். கலங்கியில், அவர்கள் சாலைகளை மறிப்பதற்காக டயர்களை தீயிட்டு கொளுத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

வன்முறை சம்பவங்கள் காரணமாக, காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, நேபாள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ககன் தாபா, பிரதமர் சர்மா ஒலி தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நேபாள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிமலேந்திர நிதி, அர்ஜுன் நர்சிங் கேசி ஆகியோர் சர்மா ஒலி அரசில் இருந்து நேபாள காங்கிரஸ் மந்திரிகளை கட்சி திரும்பப்பெற வேண்டும் என்றும், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, நேபாள காங்கிரசை சேர்ந்த வேளாண்துறை மந்திரி ராம்நாத் அதிகாரி, சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை மந்திரி பிரதீப் பவுடல் ஆகியோர் மாணவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து ராஜினாமா செய்தனர். இருப்பினும், அதே கட்சியை சேர்ந்த மற்ற மந்திரிகள் பதவி விலகவில்லை.

இதற்கிடையே, பிரதமர் சர்மா ஒலி, மாணவர்கள் போராட்டத்தால் சீரழிந்து வரும் அரசியல் நிலை குறித்து விவாதிக்க மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். ‘‘வன்முறை தீர்வல்ல. பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காண வேண்டும்’’ என்று அவர் கூறினார். இருப்பினும், பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த அடுத்த சில மணி நேரத்தில், பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதிக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் காட்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை நேபாள ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. முன்னதாக விமான நிலைய வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளநிலையில், புதுடெல்லிக்கும் காத்மாண்டுவுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஆறு விமானங்களை இயக்கும் ஏர் இந்தியா, நேற்று நான்கு விமானங்களை ரத்து செய்தது. இண்டிகோ மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

போராட்டக்காரர்கள் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் வீடுகளை எரித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் தலைமைச் செயலகக் கட்டிடமான சிங்தர்பரையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. ராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை வெளியேற்றிய பிறகு அதனனை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அங்குள்ள புனித பசுபதிநாத் கோவிலின் வாயிலை ஒரு குழுவினர் சேதப்படுத்த முயன்றதைத் தொடர்ந்து ராணுவமும் தலையிட்டது. முன்னதாக இரவு 10 மணி முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொறுப்பேற்பதாக நேபாள ராணுவம் அறிவித்திருந்தது.

முன்னதாக இதுதொடர்பாக மக்கள் தொடர்பு மற்றும் தகவல் இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், "சில குழுக்கள் கடினமான சூழ்நிலையை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு சாதாரண குடிமக்களுக்கும், பொது சொத்துக்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், வன்முறையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் அணிதிரட்டப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேபாளத்தில் கலவரங்கள் நீடிக்கும் நிலையில் ராணுவம் களமிறங்கி உள்ளது. இதன்படி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக நேபாள ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. வன்முறை உள்ளிட்ட அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர நேபாள ராணுவம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?