ரூ.13,000 கோடி கடன் மோசடி... நீரவ் மோடி சகோதரர் அமெரிக்காவில் கைது!

ரூ.13,000 கோடி கடன் மோசடி வழக்கில், நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ, ஈடி கோரிக்கையால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது சகோதரர் அமெரிக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
அத்துடன் வெளிநாடுகளில் தலைமறைவாகி இருக்கும் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியை கைது செய்ய இன்டர்போல் உதவியையும் நாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிரவ் மோடி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன.
இதைப்போல ஆண்டிகுவா குடிமகனான மெகுல் சோக்சியும் கைது செய்யப்பட்டு உள்ளதாக பெல்ஜியம் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. அவரையும் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. வங்கிக்கடன் மோசடியில் நிரவ் மோடியின் இளைய சகோதரர் நேஹல் மோடியும் (46) முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
குறிப்பாக போலி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் மூலம் சட்ட விரோதமாக பணத்தை மாற்றுவதில் நேஹல் முக்கிய பங்கு வகித்ததாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாகவும், நீரவ் மோடியின் சட்ட விரோத செயல்களுக்கு தெரிந்தே உதவியதாகவும் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.
தனது சகோதரர் நிரவ் மோடியைப் போல நேஹல் மோடியும் நாட்டை விட்டு தப்பியோடி இருந்தார். அவரை கைது செய்வதற்கு இன்டர்போல் உதவியை இந்தியா நாடிய நிலையில், அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!