சபரிமலையில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். தினமும் அதிகாலை 3 முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் இரவு 11 மணி வரையிலும் என மொத்தம் 18 மணி நேரத்துக்கு நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்து நாளொன்றுக்கு 70,000 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ செய்தும் அனுமதி வழங்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரப்பாலம், சரங்குத்தி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிக நெருக்கமாக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பம்பை நதியிலிருந்து மலையேறும் பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. போதிய குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் பக்தர்கள் பலர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எருமேலியிலிருந்து கன்னி சாமிகளுடன் பேட்டைத் துள்ளி பெருவழிப் பாதையில் காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, முக்குழி, கரிமலை, பெரியானை வட்டம், சிறியானை வட்டத்தை ஒன்றரை நாட்களாக நடந்தே கடந்துவரும் பக்தர்களும் பம்பையில் நீராடி சபரிமலைக்கு வருகின்றனர்.
பெருவழிப் பாதையில் 60 கி.மீ. தூரத்தை காடுகளின் ஊடே கரடுமுரடான பாதையில் கடந்து வரும் பக்தர்களுக்கு ஆறுதலாக தனி வரிசையில் சென்று தரிசனம் செய்யும் சிறப்பு அனுமதி கடந்த டிச.18 முதல் ஜன.1- வரை மட்டுமே செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெருவழிப் பாதையில் வரும் பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!