"உடலுக்கு புத்துணர்ச்சி"... சார்ஜாவில் பிரபலமாகும் 'மணல் குளியல்'!
உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது என்று சார்ஜா கடற்கரைகளில் வார இறுதி விடுமுறை நாட்களில் மணல் குளியல் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.உடலை மணலில் புதைத்து சிகிச்சை பெறும் ஒரு பழமையான இயற்கை சிகிச்சை முறையைத் தான் மணல் குளியல் என்கிறார்கள். இதில் உடலை சூடான மணலில் புதைத்து அதன் வெப்பம் மூலம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை நிவர்த்தி செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது. பழங்காலம் முதலே இது போன்ற இயற்கை சிகிச்சை முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, மொராக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளில் மரபு சிகிச்சையாக பயன்படுத்தப்படும் இந்த மணல் குளியல் தற்போது அமீரகத்தில் சார்ஜா கடற்கரைகளில் பிரபலமடைந்து வருகிறது.சூரிய உதயத்திற்கு முன் சார்ஜா கடற்கரையில், விடியற்காலை நேரத்தில் குழுவாக இந்த மணல் குளியலை பலரும் மேற்கொள்கின்றனர். முதலில் ஆழமற்ற குழிகள் கடற்கரை மணலில் தோண்டப்படுகிறது. பிறகு நண்பர்கள் உதவியுடன் அந்த குழியில் படுத்து பிறகு மணலால் உடல் கழுத்து வரை மூடப்படுகிறது. அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஈரமான மணலில் சுமார் 25 நிமிடங்கள் புதைந்திருக்கின்றனர்.
பிரபலமடைந்து வரும் மணல் குளியல் குறித்து அமீரகத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், “ரத்த சுழற்சி மேம்படுவது, தசைபிடிப்பில் இருந்து நிவாரணம், சருமத்திற்கான நன்மைகள் இதில் கிடைப்பது உண்மை என்றாலும் அமீரகத்தில் நிலவும் உச்சகட்டமான கோடை காலத்தில் அதிகமான வெப்பம் ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும். உடலில் நீரிழப்பு மற்றும் வெப்ப வாதம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மணல் குளியலுக்கான நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

மேலும் இதில் பங்கேற்பவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். புதைந்திருக்கும் மணல் சுத்தமாக இருக்க வேண்டும். மாசுபாடுடைய மணல் பகுதிகள் பாக்டீரியா மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் தன்மையை கொண்டு இருக்கலாம். எனவே குழந்தைகள், முதியவர்கள் இதில் மிக கவனமாக பங்கேற்க வேண்டும். நாள்பட்ட சுவாசக்கோளாறு மற்றும் தோல் நோய் பிரச்சினை உடையவர்கள் ஒரு மருத்துவ நிபுணரை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது” என்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
