சேலம்: ரூ.3 கோடி மதிப்பிலான சந்தனக் கட்டைகள் பறிமுதல்!

 
சந்தன மரக்கடத்தல்
 

 

கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 டன் சந்தன மரக்கட்டைகளை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கேரளாவைச் சேர்ந்த 6 பேரை சேலம் வனத்துறையினர் கைது செய்து, சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய கண்டெய்னர் லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் வழியாக, சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக, சேலம் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் காஷ்யப் ரவிக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில், வனவர்கள் சுரேஷ், மணிவண்ணன், பழனிவேல், வனக் காப்பாளர்கள் உள்ளிட்ட வனத்துறையினர், கடந்த 3-ம் தேதி ஈரோடு- சேலம் நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

செம்மரம் கடத்தல்

அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்திய வனத்துறையினர், அதனை திறந்து சோதனையிட்டனர். அதில், கன்டெய்னர் லாரியின் உள்ளே, சந்தன மரக்கட்டைகள் 86 உர சாக்கு பைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து, சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 டன் சந்தன மரக்கட்டைகள் இருந்தை பறிமுதல் செய்த வனத்துறையினர், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த முகமது சுகைல் (34), வாகன உதவியாளர் முகமது பசிலு ரகுமான் (26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் வனச்சரக அலுவலகத்தில் தொடர் விசாரணை நடத்தியதில், சந்தன மரக்கட்டை கடத்தலில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருந்ததும், கண்டெய்னர் லாரி பிடிபட்டதும், அவர்கள் தப்பிவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, வனச்சரக அலுவலர் துரை முருகன் தலைமையிலான தனிப்படையினர், தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் ஹோட்டலில் பதுங்கியிருந்த கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது மிசைல், முகமது அப்ரார், பஜாஸ், உம்மர் ஆகியோரை வனத்துறை தனிப்படை நள்ளிரவில் கைது செய்தது. கடத்தல் திட்டத்துக்கு அவர்கள் பயன்படுத்தி கார் ஒன்றையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சந்தனக் கடத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், சந்தன மரக்கட்டைகளை கேரளாவில் இருந்து, கர்நாடகா வழியாக, வெளிநாடுகளுக்கு பல முறை கடத்திச் சென்றுள்ளனர்.

போலீஸ்

தற்போது, கர்நாடகாவில் வனத்துறை மற்றும் போலீஸாரின் கெடுபிடி அதிகமாகி இருக்கிறது. எனவே, தமிழகம் வழியாக, சந்தன மரக்கட்டைகளை வெளிநாட்டுக்கு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடலூர் துறைமுகம் மூலமாக, சந்தன மரக்கட்டைகளை கப்பலில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது சிக்கிக் கொண்டனர். சந்தன மரக்கட்டைகளை எங்கிருந்து வாங்கினர், அவற்றை வாங்கிச் செல்லும் வியாபாரி ஆகியோர் குறித்து, வனத்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, கைதானவர்கள், சந்தன மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமுலம் அளித்ததனர்.

இதையடுத்து, சந்தன மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும், சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி, வனத்துறையினர் சிறையில் அடைத்து, கடத்தல் குறித்து தொடர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web