சீனியர் சிட்டிசன் சவால்: 90 வயதில் தேர்தலில் போட்டியிடும் தாத்தா... தனி ஆளாக சூறாவளிப் பிரச்சாரம்!
கேரளாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனது 90-வது வயதில் முதல் முறையாகத் தேர்தல் களத்தில் போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. "எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை" என்று நம்பிக்கையுடன் இவர் பரப்புரை செய்வது மற்ற வேட்பாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாராயணன் நாயர் (90 வயது), ஓய்வுபெற்ற அரசு ஊழியர். எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆஷமன்னூர் கிராமப் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டில் எந்தப் பெரிய அரசியல் கட்சியையும் சாராமல், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் புடைசூழக் கூட்டமாகக் கூட்டிச் சென்று பிரசாரம் செய்யும் நிலையில், நாராயணன் நாயரின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

வேட்பாளர் நாராயணன் நாயர், தனியொரு மனிதராக, வெள்ளை சட்டை மற்றும் வேட்டி அணிந்து, கையில் ஒரு கருப்பு கைப்பையுடன் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்துப் பிரசாரம் செய்கிறார். போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அடித்துச் செலவு செய்வதைவிட, மக்களை நேரடியாகச் சந்தித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். திருமண அழைப்பிதழ்கள் கூட நேரில் சென்று கொடுத்தால் தான் திருமணத்திற்கு வருவார்கள்; அதுபோலத்தான் வாக்குச் சேகரிப்பும் என்று அவர் தெரிவிக்கிறார்.
இவரது எளிய மற்றும் நேர்மையான அணுகுமுறைக்கு வாக்காளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு நிலவுகிறது. தனது முதுமை மற்றும் வயதைக் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நாராயணன் நாயர் மிகுந்த நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

"எந்தக் காரியத்துக்கும் வயது ஒரு தடையில்லை" என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். தனது வார்டு வளர்ச்சிக்காக நிறையப் பணிகள் செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய ஒரே இலக்கு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தப் பரபரப்பான தேர்தல் களத்தில், 90 வயது முதியவரின் நம்பிக்கை கலந்த முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
