‘சேவற்கொடியோன்’ திரு.எஸ்.பாலசுப்ரமணியனுடனான நினைவுகள்

                                                                             - எழுத்தாளர் ஜே.வி.நாதன்
 
பாலசுப்ரமணியன் ஜே.வி.நாதன்

மனிதர்களுக்கு இணையாகப் பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். 
‘என் இறப்பில் யாரும் அழக்கூடாது, என் உடலுக்கு யாரும் மாலைகள் அணிவிக்கக்கூடாது, என் உடல் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட வேண்டும்’ என்று உயில் எழுதி வைத்தவர்.

இறுதிக் காலத்தில் விகடன் குழும இதழ்கள் வெளியீட்டு நிறுவன ‘சேர்மன் எமரிடஸ்’ என்று அவர் கூறப்பட்டாலும் ‘எம்.டி.’ என்று தான் அவரை எல்லோரும் மரியாதையுடன்  குறிப்பிட்டார்கள்; குறிப்பிடுகிறார்கள்.

விகடன் எம்.டி.யின் நேர்முக உதவியாளாராக, அவருடைய இறுதிக்காலம் வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்தவர், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஜே.வி.நாதன்.  
2014 டிசம்பர் 19ம் தேதி அமரரான எம்.டி.யின்  நினைவுகள் சிலவற்றை நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். 

1992-ம் ஆண்டு, ஒரு நாள்… வேலூரில் வசித்து வந்த எனக்கு  சென்னையிலிருந்து  ஃபோன்கால்.  ‘‘நான் பாலசுப்ரமணியன் பேசறேன்..’’ 

     ‘‘பாலசுப்ரமணியனா, எந்த பாலசுப்ரமணியன்?’’- யோசனையுடன் கேட்டேன். 

     ‘‘நான்தாம்பா, விகடன் பாலசுப்ரமணியன்...’’ என்று எதிர்த் தரப்பில் பேசியவர் சொன்னதும், பதறியடித்து எழுந்து விட்டேன். 

எம்.டி. பேசுகிறார்.  ‘‘ஸார், நீங்களா? சொல்லுங்க ஸார், என்ன விஷயம் ஸார்?’’ பரபரப்புடன் கேட்டேன். கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அப்போது ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன் நான்.

    ‘‘எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். வேலூரிலேர்ந்து அஞ்சு கழுதைகள் வாங்கி அனுப்பி வைக்கணும்!’’ என்றார் எம்.டி.

     ‘படக்’கென்று சிரித்து விட்டேன். 

பாலசுப்ரமணியன்

     ‘‘நீங்க சிரிப்பேள்னு தெரியும். என் சிங்கப்பூர் ஃபிரண்டு ஒர்த்தன் கொஞ்சம் வித்தியாசமானவன். கழுதை வளர்க்கணும்னு ஆசைப்படறான். தமிழ்நாட்டிலேர்ந்து வாங்கி அனுப்பச் சொல்றான். உங்க வேலூர்ப் பக்கம் நான் கார்ல போறச்சே ரோட்டுல நிறையக் கழுதைகள் திரியறதைப் பாத்துருக்கேன்... ரெண்டு ஆண் , மூணு பொண் கழுதைகள் வேணும். எல்லாம் பால்குடி மறந்த குட்டிகளா இருக்கணும்... நீங்க வாங்கிட்டுச் சொல்லுங்கோ. நான் ஒரு வேனை அனுப்பி டெலிவரி எடுத்துக்கறேன்!’’

     ‘‘உண்மைதான் ஸார். வேலூர் ரோடுகள்ல கழுதைகள் நிறைய மேயும்... வாங்கி அனுப்பிடறேன்.’’ என்றேன்.

     ‘‘உங்களுக்கு ஆகிற செலவை நான் அனுப்பிடறேன்!’’ என்று சொல்லிப் போனை வைத்து விட்டார் விகடன் எம்.டி.

     வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்போலிருந்தது. சிரித்தேன். ‘ஜுஜுபி விஷயம்’ என நினைத்தேன். 

     கழுதைகளைத் தேடி அலைந்தபோதுதான் எனக்குத் தெரியவந்தது. அது ஜுஜுபி விவகாரம் அல்ல, இமயமலை ஏறி உச்சியைத் தொடும் வேலை என்று. 

     பலரை விசாரித்து, டோபிகானா எனும் சலவைத் தொழிலாளிகள் வசிக்கும் இடத்துக்குப் போய் என் தேவையைச் சொன்னேன். ‘‘போளூருக்குப் போகும் வழியில் வண்ணாங்குளம்னு ஒரு ஊர் இருக்கே, அங்கே போங்க. வாங்கிப்புடலாம்’’ என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.         

     வண்ணாங்குளம் போய் விசாரித்தேன். ஒரு கழுதைக்குட்டி 400 ரூபாய் விலை  பேசி, கொஞ்ச ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன். ஒரு வாரம் கழித்து வந்தால் குட்டிகள் தயாராக இருக்கும் என்றார், அட்வான்ஸ் வாங்கியவர்.

     அதே மாதிரி ஒருவாரம் கழித்துப் போனேன். புளியமாத்தடியில் ஐந்து உருப்படிகள் கட்டிப் போடப்பட்டுத் தயாராக இருந்தன. எனக்குக் குபீரென்று சந்தோஷம்! 

     மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பும்போது ஒருவர் வந்து, என்னிடம் குட்டிகளை விற்றவரின் காதைக் கடித்தார். விற்றவரின் முகம் மாறியது. அவர் வேகமாக வந்து என்னை வழி மறித்து, ‘‘இந்தாப்பா உன் ரூபா. குட்டிகள் வராது. திரும்பிப் போயிடு’’ என்றார்.

     எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

     ‘‘ஏன் ஸார், என்ன ஆச்சு?’’

     ‘‘வேலூர் சி.எம்.சி.ஆசுபத்திரிலேர்ந்துதானே நீ வர்றே? அங்கே மெடிக்கல் காலேஜில களுதைக் குட்டிகளை அறுத்து பசங்க பாடம் படிக்கிறதுக்குத்தான்  நீ குட்டிக வாங்க வந்துருக்கேன்னு தெரிஞ்சுபோச்சு!. இந்தப் பாவம் எனுக்கு இன்னாத்துக்கு? உம்... போ, போ! எடத்தக் காலிபண்ணு!’’

பாலசுப்ரமணியன்

     ‘‘ஐயோ, இல்லீங்க... சிங்கப்பூர்ல ஒருத்தர் கழுதை வளர்க்கணும்னு ஆசைப்பட்டு...’’

     ‘‘இந்த டுபாக்கூர் கதையெல்லாம் நம்பறதுக்கு நான் ஒண்ணும் லூசு இல்ல வாத்யாரே, கெளம்பு!’’ - என் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக விரட்டினார். கிராமத்து மக்கள் கூட்டமாகக் கூடி, என்னை அடிக்காத குறையாகத் துரத்தினார்கள்.

     ஒரு வாரம் வேதனையோடு திரிந்தேன். பார்க்கிற நபர்களிடமெல்லாம் சொல்லி வைத்தேன். ஒரு நண்பர் உபயோகமான தகவலை உதிர்த்தார்.  ‘‘பொய்சாட்சிச் சந்தைல போய்ப் புரோக்கருங்களைப் பாருங்க.... காரியம் கட்டாயமா முடிஞ்சுடும்.’’ 

     வேலூரிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் பொய்சாட்சி கிராமத்து ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனையாகும் சந்தைக்குப் போனேன். ஒரு புரோக்கர் கிடைத்தார். 

    ‘‘களுதைங்களா? அதுக்கென்ன, முடிச்சிப்புடலாம். ரூபா கொஞ்சம் கூடுதலா ஆவும். அதோட, ஒரே டைமுல அஞ்சு குட்டிக கெடைக்கிறது சிரமம். அடுத்த வாரம் வந்து பாரு, அநேகமா ரெடியா இருக்கும்… பிடிச்சுகிட்டுப் போய்கிட்டே இரு!’’ என்று சொல்லி அட்வான்ஸ் தொகையை என்னிடம் கறந்துகொண்டார்.

     அடுத்த வாரம் சந்தைக்குப் போனேன். அவர் வாக்குத் தவறவில்லை. குட்டிகள் ரெடி என்றார்.  கேட்ட பணத்தை குட்டிகளின் உரிமையாளருக்கும், கமிஷன் தொகையை புரோக்கருக்கும் கொடுத்தேன்.  ‘‘நான் சொல்கிற நாளில் ஐந்து குட்டிகளையும் வேலூரில் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைப்பதாகப் பேசி முடித்து, சந்தோஷத்தில் மிதந்தபடியே வேலூருக்குத் திரும்பினேன். 

      எம்.டி.க்குத் தகவல் கொடுத்தேன். ஒரு சுபயோக சுப தினத்தில் படப்பை விவசாயப் பண்ணையிலிருந்து ஒரு வேன், ஸீட்களைக் கழற்றிவிட்டு வேலூருக்கு அனுப்பப்பட்டது. முன்னதாகத் தகவல் கொடுத்திருந்ததால், புரோக்கரும் கழுதைகளின் உரிமையாளரும் கழுதைகளை பொய்சாட்சி கிராமத்திலிருந்து வேலூருக்குக் கொண்டுவந்து தயாராக வைத்திருந்தனர்.

     நள்ளிரவில் ஐந்து கழுதைகளை பின் வழியாக வேனில் ஏற்ற முற்பட்டபோது, அவை முரண்டு பிடித்து, தர தரவென்று பின்னால் நகர்ந்து இறங்க ஆரம்பித்தன. ஒருவழியாகப் படாதபாடு பட்டு ஏற்றினோம். 

     ஒரு விஷயம் எனக்கு சந்தேகம் தந்தது. அந்த ஐந்து உருப்படிகளும் எம்.டி. கேட்ட ‘பால்குடி மறந்த குட்டி’கள் போல இல்லை. வளர்ந்த கழுதைகள் போலத் தோற்றம் கொடுத்தன. அவற்றை விற்ற நபர், கழுதைகளின் வாயைப்  பிளந்து காட்டினார். ‘‘பாரு ஸார், இதுதான் பால் பில்லு.  (பால் ‘பல்’லாம்) குட்டிங்களுக்கு இதான் அடையாளம்!’’ என்று சத்தியம் செய்தார். 

     அந்த நபருக்குக் கூடுதல் பணம் கொடுத்து, கழுதைகளோடு வேனில் அவரையும் ஏற்றி அனுப்பினேன். எம்.டி.யைச் சந்தித்து  ‘பால் பல்’ விவகாரத்தை அவரிடம் நேரில் விவரித்து, அவை ‘பால்குடி மறந்த’ குட்டிகள்தான் என்று விளக்கிவிட்டு, குட்டிகளை டெலிவரி கொடுத்துத் திரும்புமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

     கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப்பின் அன்றுதான் நிம்மதியாகத் தூங்கினேன்.

     இரண்டு மாதங்கள் கழித்து சென்னை ஆபீசுக்குப் போனபோது எம்.டி.யைச் சந்தித்து, கழுதைக் குட்டிகள் சிங்கப்பூருக்குப் போய்விட்டனவா என்று விசாரித்தேன். 

     ‘‘ஃப்ளைட்டுல அனுப்பறதுக்கான வேலை நடந்துண்டிருக்கு. இப்ப எல்லாக் குட்டிகளும் நம்ம படப்பைப் பண்ணையிலதான் ஜாலியா சுத்திண்டு இருக்கு...’’ என்றார் அவர். 

     சில வருடங்கள் ஓடின.. மீண்டும் எம்.டி.யைச் சந்திக்க நேர்ந்தபோது கழுதைகள் பற்றிக் கேட்டேன். 

     சிரித்தார். ‘‘அதுகளா? இங்கதான் பண்ணைல இருக்கு. அதுல ரெண்டு கழுதைக பிள்ளையாண்டுடுத்து. இப்ப, படப்பை ஊர் ஜனங்க, கழுதைப் பால் வேணுமுன்னு கியூவில வந்து நிக்கறா!’’ என்றார்.

     எம்.டி.யை அடுத்தபடியாகப் பார்த்தபோது விசாரித்தேன். 

     ‘‘ஜே.வி.என்! விசாரிச்சதுல ஃபிளைட்டுல கழுதைகளை அனுப்ப ரொம்பச் செலவு பிடிக்கும்னு தெரியவந்துச்சு. என் சிங்கப்பூர் ஃபிரண்டு, ‘‘இவ்ளோ பணமா? எனக்குக் கழுதையே வேணாம்’’னு சொல்லிட்டான். அதனால அதுங்களை வேன்ல ஏத்தி செங்கல்பட்டு பக்கம் பசுமையா இருக்கிற இடமாப் பார்த்துக் கொண்டுபோய் இறக்கி விட்டுடச் சொல்லிட்டேன்! பாவம், எனக்கு வேறு வழி தெரியல்லை!’’ என்று சோகமாகச் சொன்னார். 

தினமதி

     அவரின் சோகம் என்னையும் தொற்றிக்கொண்டது. இதற்கா அந்தப் பாடுபட்டேன் என்று ஒரு நினைப்பு மின்னலாகத் தோன்றி மறைந்தது.

     இதற்கப்புறம் வேலூரிலிருந்து சென்னை வந்து விகடன் அலுவலகத்தில் வேலைபார்த்து 2007-ல் நாண் பணி ஓய்வு பெற்றேன்.  (ஓய்வுக்குப் பின்னரும் விகடன் என்னை விடவில்லை. தொடர்ந்து ஆறு வருடங்கள் அங்கு பணிபுரிந்தேன்.) 

    என் பணி ஓய்வினை முன்னிட்டு ஒரு விழா எடுத்து, விகடன் தாத்தா படம் பொறித்த ஒரு பவுன் தங்க மோதிரம், கிராஜுவிட்டி செக், லீவு சம்பள செக் என வழங்கிய அந்த விழா மேடையில் எம்.டி., அவர் மகனார் தற்போதைய எம்.டி திரு ஸ்ரீனிவாசன் அவர்கள், எக்ஸிகியூடிவ் டைரக்டர் திரு எம்.வி.குமார், குழும பத்திரிகைகளின் பொறுப்பாசிரியர் திரு கே.அசோகன் ஆகியோர் இருந்தார்கள். 

கழுதை வாங்கித் தர எம்.டி. என்னைப் பணித்த அனுபவத்தை அந்த விழா மேடையில் நகைச்சுவையாக நான்  விவரித்த போது, எல்லோரும் ரசித்து பலமாகக் கைதட்டி சிரித்தார்கள்.  விகடன் நிறுவன தற்போதைய எம்.டி. திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் என் பேச்சை ரொம்பவே ரசித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web