இறால் கொள்முதல் மோசடி.. ரூ.1.10 கோடி ஏமாற்றிய தொழிலதிபர் அதிரடியாக கைது!

 
ஜெயச்சந்திரன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரியை சேர்ந்தவர் ராமன். இறால்களை கொள்முதல் செய்து வியாபாரிகளுக்கு அனுப்புகிறார். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு திருச்சி விராலிமலையில் உள்ள டென் கேடி சீஃபுட் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவன உரிமையாளர் ஜெயச்சந்திரனும், அவரது கூட்டாளி சுதாகரும் ராமனை அணுகி, தினமும் 6 ஆயிரம் கிலோ இறால் வழங்க வேண்டும் என்றும், அதற்கான தொகை வரும்  3 நாட்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

அதன்படி, அக்டோபர் 2022 முதல் இறால் அனுப்பப்பட்டது.இதையடுத்து, 2023 ஜனவரி வரை, 180 டன் இறால் கொள்முதல் செய்ய ரூ.5.35 கோடி செலுத்த வேண்டும். ஆனால், ராமனுக்கு ரூ.4.25 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜெயச்சந்திரனின் கூட்டாளி சுதாகர் ரூ.3.39 கோடியுடன் தலைமறைவானார். இதனால் ஜெயச்சந்திரன் குறிப்பிட்ட தேதியில் ராமனுக்கு நிலுவைத்தொகையை கொடுக்காமல் தலைமறைவானார்.இதனால், 2023 ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ராமன் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 420-ஆவது பிரிவின் கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்து ஜெயச்சந்திரன், சுதாகரை தேடி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 2024 பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற ஜெயச்சந்திரன், முன்ஜாமீன் தொகையான ரூ.10 லட்சத்தை செலுத்தாததால், அவரது 2 வார ஜாமீன் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ஜெயச்சந்திரனை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தர, துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னக்கொடி மற்றும் தனிப்படை போலீஸார் ஜெயச்சந்திரனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) ஜெயச்சந்திரன் சென்னை தியாகராய நகரில் உள்ள தங்கும் விடுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ​​போலீசாரை பார்த்ததும் ஜெயச்சந்திரன் தப்பியோடினார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கைது

இதையடுத்து அவரை கைது செய்து மயிலாடுதுறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ராமனை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின், மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஜெயச்சந்திரனின் கூட்டாளி சுதாகர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web