'என் மரணத்திற்கு ஆசிரியர் தான் காரணம்' உருக்கமாக கடிதம் எழுதி, மாணவர் தற்கொலை!

தஞ்சாவூர் மாவட்டத்தி, “என் மரணத்திற்கு ஆசிரியர் தான் காரணம்” என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் முன்பு மாணவரின் பெற்றோரும், உறவினர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டை ரோஸ்லின் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி மணிமேகலை. இந்த தம்பதிக்கு ஸ்ரீராம் என்ற ஒரு மகன் இருந்தார். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தின் அருகே, தனியாருக்கு சொந்தமான சிபிஎஸ்இ பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவர் ஸ்ரீராம் படித்த பள்ளியின் வகுப்பு ஆசிரியர் மற்றும் கணினி அறிவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சிம்காஸ். இவர், ஸ்ரீராமை திட்டியதாக கூறப்படுகிறது. சக மாணவர்கள் முன்பு ஆசிரியர் தன்னை திட்டியதால் அவமானம் அடைந்த ஸ்ரீராம், மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் ஸ்ரீராம் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது ஸ்ரீராம், மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கூச்சல் போட்டனர். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீராமை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைக் கேட்டதும் ஸ்ரீராமின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே ஸ்ரீராம், தான் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அந்தக் கடிதத்தில், என் வகுப்பில் படிக்கும் சக தோழியிடம் நான் நட்பாக பேசுவதை பார்த்த எனது வகுப்பு ஆசிரியர், அதை தவறாக புரிந்து கொண்டார். இதன் காரணமாக என்னை சக மாணவர்கள் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டியதால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். நான் எடுத்த தற்கொலை முடிவுக்கு காரணம் என் வகுப்பு ஆசிரியர் மட்டும் தான் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீராமின் உடலை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தனது மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு வகுப்பு ஆசிரியர்தான் காரணம் என்பதை அறிந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஸ்ரீராம் படித்த பள்ளியின் நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் ஸ்ரீராமின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சிம்காசை கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!