நவ.15,16 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு... 4.80 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளனர்!
தமிழகம் முழுவதும் வருகிற நவம்பர் 15,16ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் நோக்கில், ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள்–1 தேர்வும், பி.எட். முடித்தவர்களுக்கு தாள்–2 தேர்வும் நடத்தப்படும். இதன் மூலம் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

முதலில் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கல்லறை திருநாளை முன்னிட்டு தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு இம்மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, தாள்–1 தேர்வை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 370 பேர் எழுத உள்ளனர். தாள்–2 தேர்வை 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் எழுதுகிறார்கள். தாள்–1 தேர்வு 367 மையங்களிலும், தாள்–2 தேர்வு 1,241 மையங்களிலும் நடைபெறும்.
தேர்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். தேர்வு கூடத்திற்கு 9.30 மணிக்குள் தேர்வர்கள் வர வேண்டும்; அதற்கு பிறகு அனுமதி வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். தேர்வர்கள் கருப்பு பால் பென் மூலமே எழுத வேண்டும். மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களில் பறக்கும் படை அமைக்கப்பட்டு, எவ்வித முறைகேடுகளும் நடைபெறாதபடி கடுமையான கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வினை கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனும், மதுரை மாவட்டத்திற்கு இயக்குனர் நரேசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
