பட்டா கொடுக்காமல் இழுத்தடித்த தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம்... நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

வீட்டுமனை பட்டா வழங்காமல் முதியவரை பலமுறை தொடர்ந்து அலைக்கழித்து வந்த திருச்செந்தூர் தாசில்தாருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சேவியர் (70). இவர் காட்பாடி பர்னீஸ்புரத்தில் குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார். சேவியர் கடந்த 2012ம் ஆண்டு திருச்செந்தூர் தாலுகா கந்தசாமிபுரத்தில் வீட்டுடன் கூடிய 5 சென்ட் நிலம் வாங்கினார். அதனை காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவரின் பெயரில் பதிவு செய்தார். பின்னர் சேவியர் காட்பாடியில் வழக்கம்போல் தனது பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது நிலத்துக்கு வீட்டுமனை பட்டாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து உள்ளார். மேலும் அது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்திலும் மனு அளித்திருந்தார். வீட்டுமனை பட்டா தொடர்பான மனுவிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் சேவியர் நேரடியாக திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று வீட்டுமனை பட்டா வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பணியில் இருந்த அலுவலர்கள் அந்த நிலம் புஞ்சை அனாதீனமாகும். அதனால் தற்போது பட்டா வழங்க முடியாது. இலவச பட்டா வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். அந்த சமயத்தில் மனு அளித்தால் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும், 3 சென்ட் இடத்தை விட கூடுதலாக நிலம் இருந்தால் அதற்கான பணத்தை தற்போதைய அந்த இடத்தின் மதிப்பை அரசு வழிகாட்டுதல் நிலவரப்படி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சேவியரின் நிலத்தின் அருகே புஞ்சை அனாதீன நிலத்தில் வசித்த ஒரு நபருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை அறிந்த அவர் இது குறித்து தாலுகா அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு அரசு அலுவலர்கள் உரிய பதில் கூறாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
அதனால் மனவேதனை அடைந்த சேவியர் வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர்கள் அஸ்கர்கான், அசினா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சிசுந்தரம், சேவியர் நிலத்தின் அருகே உள்ள புஞ்சை அனாதீன நிலத்தில் வசிக்கும் நபருக்கு பட்டா வழங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி திருச்செந்தூர் தாசில்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. அதனால் திருச்செந்தூர் தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் வழக்கை நடத்தியதற்காக ரூ.5 ஆயிரம் வழங்கும்படியும், மேலும் 3 மாதங்களில் சேவியருக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!