மோடி பிரச்சாரத்தில் 421 முறை கோயில், மசூதிகள்; 224 முறை முஸ்லிம், மைனாரிட்டி சொற்கள்... கார்கே விளாசல்!
இன்று கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பணவீக்கம், வேலையின்மை குறித்து பேசவில்லை என்றும், அவரது பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க கோயில், மசூதிகள், முஸ்லிம், மைனாரிட்டி ஆகிய சொற்களைத் தான் பயன்படுத்தினார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, " மகாத்மா காந்தி அகிம்சையில் நம்பிக்கை கொண்டவர், அவர் யாரையும் வெறுக்கவில்லை. ஆனால் நரேந்திர மோடி வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார், அவர் சொல்வதில் எல்லாம் வெறுப்பு தெரிகிறது.

நரேந்திர மோடி தனது 15 நாள் உரையில் 232 முறை காங்கிரஸ் பெயரை உச்சரித்தார். மோடி என்ற வார்த்தையை 758 முறை பயன்படுத்தியுள்ளார். இண்டியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி பற்றி 573 முறை பேசினார். ஆனால், பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின்போது 421 முறை கோயில்கள், மசூதிகள் குறித்து பேசினார். முஸ்லிம்கள், மைனாரிட்டி போன்ற வார்த்தைகளை 224 முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், இது குறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புதிய மாற்று அரசு அமைவதற்கான ஆணையை நாட்டு மக்கள் ஜூன் 4-ம் தேதி வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இண்டியா கூட்டணி முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்கள் அரசு அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும். ஜூன் 4-க்குப் பிறகு, மோடி மற்றும் பாஜக தலைவர்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மகாத்மா காந்திஜியைப் பற்றி நரேந்திர மோடி முன்பே அறிந்திருந்தால் அவர் அரசியலமைப்பு, சுயராஜ்யம், அகிம்சை, வளர்ச்சி, ஏழைகள், தலித்துகள் மற்றும் இந்தியாவைப் பற்றி பேசியிருப்பார்.
இந்த முழுத் தேர்தலின் போதும், மோடி, மகாத்மா காந்தி மற்றும் இந்தியா மீதான தனது அறியாமையைத் தவிர வேறு எதையும் காட்டவில்லை. மோடிக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கட்சி அகிம்சையை வெறுக்கிறது" என்று பேசினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
