"தாமிரபரணி காவலருக்கு நன்றி..." தோழர் ஆர்.நல்லகண்ணுவுடன் எழுத்தாளர் காமராசு சந்திப்பு!
தாமிரபரணியை பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட முகநூல் பதிவு : தாமிரபரணியின் காவலன் எங்கள் மண்ணின் மைந்தன் தோழர் ஆர்.நல்லகண்ணு அய்யா. இன்றைக்கு தாமிரபரணி மணல் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றால் அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வாங்கி வைத்திருக்கும் தடை உத்தரவு தான். கறைபடாத கரத்துக்கு சொந்தக்காரர் அவர். அவரது நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து அவருடைய பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இது எங்களுக்கு எல்லாம் பெருமை.
எனவே அவரிடம் ஆசிபெற நான் சென்னையில் அவர் வசிக்கும் வீட்டுக்கு சென்றேன். மிகப்பெரிய அரசியல்வாதிகள் எல்லோரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தில் ஆடம்பரமே இல்லாத வீட்டில் குடியிருந்து வருகிறார் எங்கள் அய்யா. அவரை பார்க்க வந்திருக்கிறோம் என்றவுடன் அவரது மருமகன் எனது ஊருக்கு அருகே உள்ள நாட்டார்குளத்தினை சேர்ந்த ஐயப்பன் ஓடி வந்து அய்யாவை கூட்டி வந்தார். அய்யா மிகவும் தளர்ந்து போய்தான் இருக்கிறார்கள். ஆனால் தாமிரபரணியை பற்றி பேச ஆரம்பித்தவுடன் உற்சாகமாகி விட்டார்.
எங்களை கண்டவுடன் தாமிரபரணியின் பழமையான போட்டோவை எடுத்து வந்து காட்ட சொன்னார். ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் பழைய படம் அது. அதை பார்த்தவுடன் அவருக்கு ஒரு உற்சாகம். அடுத்து வள்ளியூரில் ஆலய நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டோர் புகைப்படத்தினை எங்களிடம் காட்டி அது குறித்து பேசினார்.
அதோடு மட்டுமல்லாமல் நான் தாமிரபரணியை சாக்கடை இல்லாத நதியாக மாற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 3 ந்தேதி நடந்த விசாரணையில் நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி.ராபர்ட் புரூஸ் ஆஜராகி மத்திய அரசு தரப்பில் 17 மாநிலங்களில் 57 நதிகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்காக சுமார் ரூபாய் 99 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க கோரி மாநில அரசு சார்பில் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் உரிய நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணியை பாதுகாக்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடம் உரிய நிதி கேட்டு பெற மாநில அரசு திட்ட அறிக்கையை தயாரித்து அனுப்பும்படி உத்தரவிட வேண்டும் என நீதிபதிகளிடம் அவர் கோரியிருந்தார். இந்த கோரிக்கையை அய்யா, தமிழக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தேன். செய்து தருகிறேன் என உறுதியளித்த அவர் தனது மருமகன் அய்யப்பனிடம் இதுகுறித்து நினைவுப்படுத்த கூறினார்.
என்னோடு அயோத்தி பட இயக்குனர் மந்திரமூர்த்தி, சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச்சங்க தலைவர் சைமன், எனது சிஷ்யன் காமராசு செல்வன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். எனது ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதையை அய்யாவிடம் கொடுத்தேன். இயக்குனர் பொன்னாடை போர்த்தினார். சைமன் சங்க காலண்டரை கொடுத்தார். தாமிரபரணி காவலருக்கு நன்றி தெரிவித்து விட்டு, அங்கிருந்து தாமிரபரணி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் கிளம்பினோம்.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!