நடிகை சரோஜாதேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது… முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
சரோஜா தேவி
 


 
கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி நடிகை சரோஜா தேவி தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட   பல மொழி திரைப்படங்களில் நடித்தவர். இவர்  இன்று  ஜூலை 14 ம் தேதி திங்கட்கிழமை அன்று பெங்களூரில் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 87. பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற இவரது மறைவு, திரையுலகத்தையும் பொதுமக்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரோஜா தேவி

1955ல் தனது 17வது வயதில் ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் 1958ல் வெளியான ‘நாடோடி மன்னன்’ படம் இவரை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உயர்த்தியது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனது அழகு மற்றும் நடிப்புத் திறனால் ரசிகர்களை கவர்ந்தார்.

தனது திரை வாழ்க்கையில், சரோஜா தேவி பத்மஸ்ரீ (1969), பத்மபூஷண் (1992), தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். விருது, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றார். இந்திய திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராகக் கருதப்படும் இவர், 1960களில் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கினார். ‘பாசமலர்’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘குலேபகாவலி’ போன்ற பல தமிழ் படங்கள் இவரது நடிப்பால் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

சரோஜா தேவியின் மறைவுக்கு, திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.  நடிகர் ரஜினிகாந்த் ” பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ” தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திருமதி சரோஜாதேவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் திருமதி சரோஜாதேவி அவர்கள் தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர்.

சரோஜா தேவி

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும். கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா. உன்னை ஒன்று கேட்பேன். லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார் அவர்கள். சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன். இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர்.
எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் திருமதி சரோஜாதேவி  மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?