நிறைவேறாமலேயே அலைபாயும் கவிக்கோ அப்துல்ரகுமானின் கடைசி ஆசை... நினைவஞ்சலி கட்டுரை!

 
கவிக்கோ அப்துல் ரகுமான்
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் ஜே.வி.நாதன்

(தமிழின் மிகச் சிறந்த கவிஞராகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், ஹைக்கூ கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவராகவும் வலம் வந்த கவிக்கோவின் கவிதைகளைக் கேட்டு ரசிக்க இறைவன் அவரைத் தன்னிடம் அழைத்துக்கொண்ட நாள் 2-6-2017. அவர் பிறந்த நாள்: 9-11-1937)
கவிக்கோ அப்துல் ரகுமானை ஒருமுறை  நான் பேட்டி கண்ட போது அவர் பகிர்ந்த சில சுவாரஸ்யமான அனுபவங்கள்:

      ‘‘என் பள்ளிப் பருவத்தில் மதுரை சந்தைப் பேட்டைப் பகுதியில் என் குடும்பம் வசித்து வந்தது. ‘மகதி’ என்ற புனைப்பெயரில் அப்பா பத்திரிகைகளில் எழுதுவார். மகதி என்றால், கல்கி அவதாரத்தைப் போல எதிர்காலத்தில் தோன்றக் கூடிய சீர்திருத்தவாதி என்று பொருள். அப்பாவின் உண்மைப் பெயர் சையது அகமது. என் தாத்தா பாரசீகத்திலும் உருதுவிலும் மிகுந்த புலமை படைத்தவர். 

தாத்தா பாரசீக மொழியில் கவிதை எழுதுவார்; அப்பா உருது மொழியில் கவிதை எழுதுவார். ஆனால், அப்போது நான் தனித் தமிழ் வெறியனாக இருந்தேன்.  மதுரை சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பு. எட்டாம் வகுப்பு படிக்கும்போது யாப்பில் ஆர்வம் ஏற்பட்டது. யாப்பை முறையாகப் படிக்கும் முன்பே சந்தத்தை வைத்துக் கவிதை எழுதுவேன். 

பத்தாம் வகுப்பில் தேவதாஸ் என்ற நண்பன் வெண்ணிலா, கண்ணிலா, மண்ணிலா, பெண்ணிலா என்று நான்கு எதுகையைக் கொடுத்து, அதற்கு என்னால் பாட்டு எழுத முடியுமா என்று கேட்டான். அதற்கு அறுசீர் ஆசிரிய விருத்தத்தில் பாடல் எழுதிக் கொடுத்தேன். ‘’இது நல்லா இருக்கு. ஸ்கூல் மேகஸீனில் போடலாம்!’’ என்றான். 

அப்போதெல்லாம் நான் ரொம்பவும் பயந்த சுபாவம் கொண்டவன். இராகவ ஐயங்கார் என்ற குடுமி வைத்திருந்த கண்டிப்பான ஓர் தமிழாசிரியர்தான் பள்ளி ஆண்டு மலருக்குப் பொறுப்பாக இருந்தார். அவரை நினைத்தாலே பயமாக இருக்கும். எனவே, என் கவிதையைத் தேவதாஸிடம் கொடுத்து அவன் எழுதியதாகவே ஆசிரியரிடம் கொடுத்துவிடச் சொன்னேன்.. அவன் கொண்டு சென்று கொடுத்தான். ‘’நல்லா இருக்கே, யார் எழுதியது?’’ என்று அவர் தேவதாஸைக் கேட்டார். அவன் தயங்காமல், ‘’நானே எழுதினேன் ஸார்!’’ என்று சொன்னதை, ஜன்னலுக்கு வெளியே நின்று ஏக்கத்துடன் பார்த்தேன். 

கவிக்கோ அப்துல் ரகுமான்

“பயலே, கவிதை நன்னா இருக்கு. மேகஸீனில் போடலாம்!’’ என்றார் இராகவ ஐயங்கார்.  ஆக, அச்சேறிய என் முதல் கவிதை, தேவதாஸ் பெயரில் பள்ளி மேகஸீனில் வெளிவந்தது. எங்கள் பள்ளியில் பி.வி.எஸ்.என்று ஓர் ஆசிரியர். பாட்டு, ஆட்டம், நாடகம் என்று மாணவர்களைக் கலைகளில் ஈடுபடவைத்தார். 

இந்தச் சமயத்தில் அரை மணி நேர டிராமா ஒன்றுக்கு வசனம் எழுதி நானும் அதில் நடித்தேன். அதற்குப் பிறகு நிறைய நாடகங்களுக்கு நான் வசனம் எழுதினேன். மதுரையில் வெளியான இந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றைக்கூட விடாமல் நான் பார்ப்பேன். குறிப்பாக என் வீட்டுக்குப் பக்கத்தில் லஷ்மி தியேட்டர் என்று ஒன்று இருந்தது. அதில் திரையிடப்பட்ட ‘அனார்கலி’ படத்தை எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கே இல்லை. படத்தின் பெயர் ஞாபகமில்லை. ’மொகலே ஆஜம்’ படத்தின் பிரபல இசையமைப்பாளரான நெளஷத் அலியின் இசை. இந்தியக் காதல் கதைகள் மூன்றை இணைத்து லவ் தீமில் எடுத்த கதை. பாட்டுக்கள் அருமையாக இருக்கும். கதாநாயகனாக பாரத்பூஷண், கதாநாயகியாக நூதன்... டிராஜடியில் முடிகிற அந்தப் படத்தின் பாட்டுக்களுக்காகவே மூன்று தடவை தியேட்டரில் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதன்பிறகு என்னைப் பித்தனாக்கி, அந்தப் படத்தின் பாடல்களைத் தினமும் ஒரு முறையாவது கேட்காவிடில் தலை வெடித்து விடுவது போல் இருக்கும். படம் பார்க்கக் காசு இல்லாததால், தியேட்டரின் வெளிச் சுவர் அருகில் நின்று ஒலி ரூபமாகப் பாடல்களை ஒருநாள் கூட விடாமல் கேட்டது மறக்க முடியாத சம்பவம்.

தியாகராசர் கல்லூரியில், இண்டர்மீடியட்டில் 2-டி சிறப்புத் தமிழ் என்று ஒரு கோர்ஸ் இருந்ததை அறிந்து அதில் தமிழார்வத்தால் சேர்ந்தேன். கல்லூரியில் தமிழறிஞர்கள்  மா.இராசமாணிக்கனார், ஔவை துரைசாமிப்பிள்ளை, அ.கி.பரந்தாமனார் போன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள். எங்கள் தெருவில் பஞ்சாசாமி ஊர்வலம் நடக்கும். நபிகள் நாயகம் அவர்களின் பேரன் உசேன் ஜனநாயகப் போர் ஒன்றில் இறந்து விட்டார். அதில் இறந்தவர்களின் கை முதலிய உறுப்புகளை வெட்டிப் பகைவர்கள் கொண்டு சென்றதைத் துக்கம் கொண்டா டுவதாகப் பஞ்சாசாமியின் ஐதீகம். பஞ்சாசாமி சாவடி என்ற ஒன்று பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. பஞ்சாசாமி திருவிழா பத்து நாட்கள் நடத்திய சமயம் தவிர, மீதி நாட்களில் மூடியே கிடக்கும். அனுமதி வாங்கி அங்கு நான் படிப்பகம் நடத்தினேன். ஆனந்த விகடன், கல்கி போன்ற அப்போதைய பாப்புலர் பத்திரிகைகளை வரவழைத்தேன். எங்கள் தெருவுக்குப் பின்புறத் தெருவில் மூன்று படிப்பகங்கள் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் முன்னேற்றக் கழகம் நடத்திய படிப்பகங்கள் அவை.  

‘சரஸ்வதி’ பத்திரிகையில் வெளியான ஜெயகாந்தன் எழுதிய ‘பிணக்கு’ கதையையும், சுந்தர ராமசாமி எழுதிய ‘ஒரு புளிய மரத்தின் கதை’ தொடரையும் அங்குதான் நான் படிக்க நேர்ந்தது. இச்சமயத்தில் ஒரு கையெழுத்துப் பிரதிப் பத்திரிகையைத் துவக்கி நாடகம், கவிதை என்று எழுதினேன். நூலகங்களில் முரசொலி, கண்ணதாசனின் தென்றல் பத்திரிகைகளை ஆர்வமாகப் படிப்பேன். கல்கியில் ’சிவகாமியின் சபதம்’ முடிந்து ’பொன்னியின் செல்வன்’ வந்து கொண்டிருந்தது. வாசகசாலையில் கல்கி படிப்பவரிடம் ‘‘அடுத்தது நான்’’என்று சொல்லி, ஒவ்வொருவரும் ரிசர்வ் செய்துகொண்டு படிப்போம். 

கவிக்கோ அப்துல் ரகுமான்

என் கையெழுத்துப் பிரதி பத்திரிகையில் ஓவியம் வரைவது நான்தான். பின்னாளில் சாலமன் பாப்பையா எம்.ஏ. இரண்டாவது வருடம் படித்தபோது நான் எம்.ஏ. முதல் வருடம் படித்தேன். ஓவியம், நாடகம், பாட்டு, கவிதை, பேச்சு என்று நான் புகழ் பெற்றிருந்தேன். அதேபோல் எல்லாத் துறைகளிலும் சாலமன் பாப்பையா பிரபலம். எம்.ஏ.வில் நானும் அவரும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையைப் பெரிய அளவில் பைண்ட் செய்து வெளியிட்டோம். அதில் அவரை ஒருமுறை அட்டைப்படம் போடச் சொன்னேன். நான் உள்ளே போடப் படம் வரைந்தேன். பாப்பையா என் ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ‘‘படம் நன்றாக இருக்கிறது. அட்டையிலேயே போடலாம்!’’ என்றார், பெருந்தன்மையுடன். 

இண்டர்மீடியட்டில் நான் முதல் வருடம் படிக்கும்போது ப.நெடுமாறன் இரண்டாமாண்டு படித்தார். நா.காமராசன், அபி, இன்குலாப், காளிமுத்து ஆகியோர் எனக்கு ஜூனியர் செட். மீரா என் கிளாஸ்மேட். . இண்டர்மீடியட் படிக்கும்போது ‘மாணவர் திட்டம்’ என்ற ஒன்றை ’ஆனந்த விகடன்’ ஆரம்பித்தது. ‘காதல் கொண்டேன்!’ என்ற ஒரு கவிதையை விகடனுக்கு அனுப்பினேன். முதன்முதலில் பத்திரிகைக்காக நான் அனுப்பிய கவிதையே அதுதான். அது அச்சேறிற்று. 

என் முதல் கவிதையே ஆனந்தவிகடனில் என் போட்டோவுடன் பிரசுரமானதும் ஒரு சான்றிதழ் மற்றும் பரிசாக ஒரு பைலட் பேனாவும் வரப்பெற்றதும் என்னை மகிழ்வடைய வைத்தன!’’ 

கவிக்கோவின் நிறைவேறாமல் நிற்கும் இறுதி ஆசை!

கவிக்கோ மனதில் ஒரு குறை வெகு காலமாக இருந்து வந்தது. இறப்பதற்கு 20 தினங்களுக்கு முன் அவர் யூனிவரஸல் பப்ளிஷர்ஸ் வெளியீட்டு நிறுவன உரிமையாளர் மற்றும் பல நூற்றுக்கணக்கான நூல்களின் ஆசிரியருமான அப்துற்-றகீம் அவர்களின் மருமகனுமான ஷாஜஹானிடம் தன் விருப்பத்தை வெளியிட்டார்.     

‘‘தமிழ் இலக்கியக் காவியங்கள், காப்பியங்கள் எல்லாம் நூல் வடிவில் வெளிவந்திருப்பதைப்போல, இஸ்லாமிய பழைய தமிழ் இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகிய்வற்றை ஒரு தொகுப்பு நூலாக வெளியிட வேண்டும். சீறாப் புராணம், குணங்குடி மஸ்தான் பாடல்கள், மலேஷியாவில் உரையுடன் ராஜ நாயகம், ஆரிபு நாயகம் போன்ற சில நூல்கள் தனித் தனியாக வெளிவந்துள்ளன.

பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள் என உள்ள முகைதீன் புராணம், திருக்காரணப் புராணம், நாகூர் புராணம், தீன் விளக்கப் புராணம், மூசாநதிப் புராணம், சின்ன சீறா, குத்பு நாயகம், ராஜநாயகம், ஆரிபு நாயகம், ஷாதலி நாயகம் போன்ற எல்லா இலக்கியங்களையும் ஒரே தொகுப்பு நூல் வடிவில் கொண்டு வர வேண்டுமே!’’ என்று கவிக்கோ தன் ஆதங்கத்தை ஷாஜஹானிடம் கூறிய போது, ‘‘பெரும் பொருள் செலவு ஆகுமே’’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

‘‘ஆகட்டுமே... மெனக்கெட்டு இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை ஒருங்கிணைக்கும் செயலை நாம் செய்தே ஆக வேண்டும்!’’ என்று கவிக்கோ அழுத்தம் திருத்தமாகச் சொன்னதை ஷாஜஹான் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். கவிக்கோவின் அந்த ஆசை இன்று வரை நிறைவேறாமல் தனது ஏக்கத்தைச் சுமந்தப்படியே காற்றில் உலவி கொண்டிருக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web