“நான் ஆரம்பிச்ச கட்சி... இஷ்டமில்லைன்னா வெளியேறலாம்...” மேடையிலேயே அன்புமணியிடம் ஆவேசம் காட்டிய ராமதாஸ் | பாமகவில் கோஷ்டி மோதல்!!

 
அன்புமணி

“இது நான் ஆரம்பிச்ச கட்சி. விருப்பம் இல்லாதவங்க யாராக இருந்தாலும் தாராளமாக வெளியேறலாம்” என்று தனது நியமனத்திற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேடையிலேயே மருத்துவர் ராமதாஸ் பேசியது தொண்டர்களையும், பாமக நிர்வாகிகளையும் அதிர்ச்சியடைய செய்தது. ஏதோ கோபத்திலோ, வருத்தத்திலோ கூறியுள்ளார் என்று நிலைமையை சகஜமாக்க அன்புமணி மேடையிலேயே சிரித்தவாறே அமர்ந்திருந்த போதிலும், மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை ஆணித்தரமாக அடுத்தடுத்து உச்சரித்து ஆவேசத்தைக் கூட்டினார் ராமதாஸ்.

இன்று புதுவையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸுக்கும், ராமதாஸுக்கும் காரசாரமான மோதல் உருவாகியது அங்கே கூடியிருந்த கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்தது. ஒரு கட்டத்தில் தான் புதிதாக தனியே அலுவலகம் திறந்திருப்பதாக கூறி, தொலைபேசி எண்ணை அறிவிஹ்த அன்புமணி, மேடையிலேயே மைக்கை விசிறியடித்து விட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறினார். 

புதுவையில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் இளைஞர் அணி தலைவர் நியமனம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் வெடித்தது அரசியல் களத்தில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

அப்பா, மகனுக்கும் இடையே மோதல் வலுக்கிற அளவுக்கு பலம் பொருந்தியவராக உச்சரிக்கப்படுகிற பெயராக இருக்கிறது பரசுராமன் முகுந்தன். என் மகனுக்கும், குடும்பத்தினருக்கும் கட்சியில் பதவி இல்லை என்று தமிழகம் முழுவதும் முழுங்கி பிரச்சாரம் செய்து கட்சியை  வளர்த்திருந்தார் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில் அன்புமணி பாமக தலைவராக உருவெடுத்ததில் இருந்து எதிர்ப்பு அரசியல் மட்டுமே செய்யும் நிலைக்கு பாமக தள்ளப்பட்டுள்ளது.

தொண்டர்களிடையேயும் பழைய எழுச்சியில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் வியூகங்களும் சரிவை சந்தித்தன. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சார யுக்திக்கே அப்போதே டாக்டர் ராமதாஸ் சம்மதிக்கவில்லை என்றும் அன்புமணி அவரை சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்பட்டது. அந்த பிரச்சாரம் எடுபடாத நிலையில் அடுத்தடுத்த வியூகங்களும் கைகொடுக்கவில்லை. மீண்டும் கூட்டணியை நோக்கி பாமக தள்ளப்பட்டது தொண்டர்களிடையே அயர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில் கட்சியில் சேர்ந்த உடனேயே எப்படி பதவி வழங்கலாம் என கேட்க, விருப்பம் இருந்தால் இருக்கலாம், இல்லைனா கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் பேசியது அங்கிருந்த நிர்வாகிகளை மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.  இளைஞர் அணி தலைவருக்காக பெற்ற மகனையே அத்தனை பேர் முன்னிலையிலும் எதிர்க்க ராமதாஸ் முடிவெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுவையில் நடைபெற்ற பாமக பொதுக் குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி  மற்றும் தமிழகம் முழுவதும் இருந்தும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று காலையில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய மருத்துவர் ராமதாஸ், “2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவுவதற்காக பரசுராமன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்கிறேன்” என்றார்.

அன்புமணி

பொதுவாக  காடுவெட்டி குரு காலத்தில் இருந்தே மேடையில் மருத்துவர் ராமதாஸ் பேசும் போது யாரும் குறுக்கிட்டு பேச மாட்டார்கள். தங்களது அதிருப்தியைத் தனியே சொல்வார்கள். இந்நிலையில் ராமதாஸ் அறிவித்ததுமே, அருகிலிருந்த அன்புமணி ராமதாஸ் குறுக்கிட்டு 'எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம்' எனக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. 

உடனே ராமதாஸும் கொஞ்சம் யோசிக்காமல், 'உனக்கு வேண்டாம் என்றால் நீ போ!' என்றார். மேலும் தொடர்ந்த அவர், 'நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும். பரசுராமன் முகுந்தன் தான் இளைஞரணி தலைவர்” என்று உறுதியான குரலில் கூறினார். 

மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு கூறியதும் அங்கே பொதுக்குழுவில் கலந்து கொண்டிருந்த பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் ராமதாஸுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மீண்டும் உறுதியாக பேசிய ராமதாஸ், "மீண்டும் இது என் கட்சி. நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும்" என அழுத்தமாக கூறியவர், " உங்களுக்கு வேண்டாம் என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளுங்கள்" என்று கறார் காட்டினார். 

ராமதாஸின் இந்த பேச்சினால் அதிருப்தியடைய அன்புமணி, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தவாறே மேடையிலேயே அமர்ந்திருந்தார். இத்தனை அதிருப்திக்கும், களேபரத்திற்கும் காரணமாக பரசுராமன் முகுந்தன் வெளியாள் எல்லாம் கிடையாது. ராமதாஸின் சொந்த பேரன் தான் .

அன்புமணி ராமதாஸின் அக்கா காந்திமதி - பரசுராமன் தம்பதியரின் மகன் தான் இந்த முகுந்தன். அவரை கட்சியின் இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு தான் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில் கொஞ்சம் யோசித்த அன்புமணி, மேடையிலேயே, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகவும் அதற்கான தொலைபேசி எண்ணையும் மேடையிலேயே அறிவித்து விட்டு, மைக்கை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். அன்புமணி ராமதாஸ் வெளியேறுகையில் அவர் பின்னால் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் அணிவகுத்து வெளியேறி சென்ற நிலையில், பாமக இரண்டாக உடையும் அபாயம் உருவாகியுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web