கதறும் கேரள மக்கள்... மூளையைத் தின்னும் அமீபா வைரஸுக்கு 18 பேர் பலி; 67 பேருக்கு தீவிர சிகிச்சை!
கடவுளின் தேசத்தில் நிம்மதியாக நீச்சலடித்து குளிக்க கூட முடியாமல் மக்கள் கவலையில் உள்ளனர். மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் கேரள மக்களை கதிகலங்க செய்து வருகிறது. இது வரையில் மூளையைத் தின்னும் அமீபா நோய் கிருமிக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், புதிதாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவனுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறுவனுக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதால், சுகாதாரத் துறை அக்குளம் எனும் சுற்றுலா கிராமத்தில் உள்ள நீச்சல் குளத்தை மூடிவிட்டனர்.

அந்த நீச்சல் குளத்திலிருந்து சோதனைக்காக நீர் மாதிரிகளை சேகரித்தனர். அந்தச் சிறுவன் முந்தைய நாள் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குளித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.செப்டம்பர் 14ம் தேதி கேரளாவில் இதுவரை 67 அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், இந்த பாதிப்பால் இதுவரை 18 பேர் உயிரிழந்து விட்டனர். இது குறித்து பேசிய கேரளா சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸை எதிர்த்துப் போராட கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம். மேலும் நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நோய்க்கு எதிராக நாம் வலுவான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். கால்நடைகளை குளிப்பாட்டும் நீர்நிலைகள் உட்பட, தேங்கி நிற்கும் அல்லது மாசுபட்ட நீரில் நம் முகத்தை கழுவவோ அல்லது குளிக்கவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கிணறுகள் அறிவியல் ரீதியாக குளோரினேட் செய்யப்பட வேண்டும். நீர் பூங்காக்களில் உள்ள நீச்சல் குளங்களும் முறையாக குளோரினேட் செய்யப்பட வேண்டும்.
பராமரிப்பு தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். வீடுகளில் உள்ள நீர் சேமிப்பு தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த வகை அமீபா உங்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறது. எனவே தண்ணீர் உங்கள் மூக்கில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
